பேரறிவாளனை முன்கூட்டியே விடுவிக்க கோரிய வழக்கு; மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்த கூடாது: 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவு

பேரறிவாளனை முன்கூட்டியே விடுவிக்க கோரிய வழக்கு; மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்த கூடாது: 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவு
Updated on
1 min read

பேரறிவாளனை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைத்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைதண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுவிக்கக் கோரி தமிழக அமைச்சரவை கடந்த 2018 செப்.9-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அந்த தீர்மானம் மீது தமிழக ஆளுநர் இதுவரையிலும் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இந்நிலையில், தன்னை இந்த வழக்கில் இருந்து முன்கூட்டியே விடுவிக்கக் கோரி பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது பேரறிவாளன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் ஆஜராகி, ‘‘பேரறிவாளன் உள்ளிட்டோரை முன்கூட்டியே விடுவிக்க தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டது. தற்போது இந்த விஷயத்தில் ஆளுநருக்கு தனிப்பட்ட அதிகாரம் இல்லை என்பதால் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாகதொடர்ந்து காலதாமதம் செய்யப்படுகிறது. எனவே இந்த வழக்கில் உச்ச நீதிமன்றமே தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை பேரறிவாளனை ஜாமீனில் விடுவிக்க வேண்டும்’’ என்றார்.

அப்போது, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று அவகாசம் கோரினார்.

அதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கு உரிய முடிவெடுக்கப்படாமல் ஆண்டுக்கணக்கில் நடந்து வருகிறது. இதுதொடர்பாக ஆளுநர் முடிவெடுப்பார் எனமுதலில் கூறப்பட்டது. அதன்பிறகு குடியரசுத் தலைவர்தான்இதுதொடர்பாக முடிவெடுக்க முடியும் என்று கூறி கோப்புகளும்அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகும் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் தமிழக ஆளுநரின் தாமதம் ஏற்புடையது அல்ல. இந்த விவகாரத்தில் தற்போதைய நிலை என்ன என்பது கேள்விக்குறியாகி உள்ளது. அரசியலமைப்பு சட்ட அத்தியாயம் 72-ன்படி குடியரசுத் தலைவருக்கு உண்டான தனிப்பட்ட அதிகாரம் குறித்தும் கவனத்தில் கொள்ளவேண்டி உள்ளது.

எனவே, இந்த விஷயத்தில் மத்திய அரசு இனியும் தாமதம் செய்யாமல் தகுந்த முடிவை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அறிவுறுத்தி, விசாரணையை வரும் ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in