சட்டப்பேரவை நிகழ்வு நேரலை, நவீனமயமாக்க பணிகள்: பேரவைத் தலைவர் அப்பாவு ஆலோசனை

சட்டப்பேரவை நிகழ்வு நேரலை, நவீனமயமாக்க பணிகள்: பேரவைத் தலைவர் அப்பாவு ஆலோசனை

Published on

சட்டப்பேரவையின் அன்றாட நிகழ்வுகளை நேரலை செய்வது, பேரவை நடவடிக்கைகளில் நவீனமயமாக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேரவைத் தலைவர் மு.அப்பாவு ஆலோசனை நடத்தினார்.

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டப்பேரவை கூட்டம் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பேரவை அரங்கில் நடத்தப்பட்டது. அப்போது கரோனா பரவல் அதிகரித்த நிலையில், பேரவைக் கூட்டம் பாதியில் முடித்துக் கொள்ளப்பட்டது. அதன் பிறகு, 2020-ம் ஆண்டு இறுதியில், சென்னை கலைவாணர் அரங்கில் உள்ள கூட்ட அரங்கில் பேரவைக் கூட்டம்நடைபெற்றது. தொடர்ந்து இந்தஆண்டுக்கான ஆளுநர் உரையும், இடைக்கால பட்ஜெட், திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் 16-வதுசட்டப்பேரவைக்கான உறுப்பினர் பதவியேற்பு, பேரவைத் தலைவர் தேர்வு, பட்ஜெட் தாக்கல் உள்ளிட்டவை கலைவாணர் அரங்கிலேயே நடைபெற்றன.

இந்நிலையில், தற்போது கரோனா பரவல் குறைந்துள்ளதால் வரும் 2022-ம் ஆண்டுக்கான ஆளுநர் உரையை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையில் பேரவைக்கூட்ட அரங்கில் நடத்த அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கான அடிப்படைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக காகிதமில்லா சட்டப்பேரவை என்ற அடிப்படையில், பேரவை அரங்கில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் இருக்கைகள் முன்பு கணினிகள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சட்டப்பேரவைநவீனமயமாக்கல் உள்ளிட்டவை குறித்த ஆலோசனைக் கூட்டம்பேரவைத் தலைவர் மு.அப்பாவுதலைமையில் நேற்று நடந்தது.

இதில், ‘சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை செய்யப்படும்’ என்ற முதல்வரின் அறிவிப்பு தொடர்பான பணிகள் குறித்தும், சட்டப்பேரவை கூட்டத்தை புனித ஜார்ஜ் கோட்டையில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள், அவ்வாறு நடத்தப்பட்டால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், தேவையான நிதி உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில், பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, பேரவை செயலர் கி.சீனிவாசன், தொழில்நுட்பத் துறை செயலர் நீரஜ் மிட்டல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in