

அதிமுக சட்ட விதிகளின்படி அமைப்பு தேர்தல்கள் நடைபெறும்என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சென்னையில் இருந்து நேற்று மதுரைக்கு விமானத்தில் சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் அவர் கூறியதாவது:
அதிமுகவின் சட்ட விதிகளின்படி கட்சியின் அமைப்பு தேர்தல்முறையாக நடைபெறும். முதல்கட்டமாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் தர்மத்தின்படி நடந்து முடிந்துள்ளது. தொடர்ந்து அமைப்பு தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான தேர்தல் தொடர்பாக நீதிமன்றம் என்னதீர்ப்பளித்தாலும் மதிப்பேன்.
அதிமுகவில் சேரும் உறுப்பினர்களுக்கான கார்டுகளை வட்டச்செயலாளர்கள் வாங்கிச் சென்றுள்ளனர். உறுப்பினர் அட்டைகளைஉரியவர்களிடம் ஒப்படைக்கஅவர்ளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணாமலை வாழ்த்து
இதற்கிடையில், ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு தமிழக பாஜக தலைவர்அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
‘‘கடினமான காலங்களில் கலங்காமல் கட்சியை வழிநடத்தி,தொண்டர்களை ஒருங்கிணைத்து,தோழமைக் கட்சிகளுக்கு தோள்கொடுத்து அதிமுகவை சிறப்பாக வழி நடத்தும் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரும் ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் கட்சியை வழிநடத்தும் பொறுப்புக்கு போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை அறிந்து மகிழ்ந்தேன். இருவரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினேன்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.