

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
சென்னையில் உள்ள சைவத் தலங்களில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் முக்கியமானது. பழமையான இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் பங்குனி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
இந்த ஆண்டு பங்குனி திருவிழா கிராம தேவதையான கோலவிழியம்மன் பூஜையுடன் கடந்த 13-ம் தேதி தொடங்கியது. 14-ம் தேதி கொடியேற்றம் நடந்தது. இதையடுத்து அதிகார நந்தி, புருஷாமிருகம், ரிஷப வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி தினமும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், நேற்று நடந்தது. இதையொட்டி உற்சவருக்கு அதிகாலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. சரியாக காலை 6.15 மணியளவில் சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். 7.30 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது, ‘ஹர ஹர மகாதேவா’, சிவ சிவ.. நமச்சிவாய’என்ற பக்தி முழக்கங்களை பக்தர்கள் எழுப்பினர்.
மாட வீதிகளில் வலம் வந்த தேர், பிற்பகலில் நிலைக்கு வந்து நின்றது. இதையடுத்து நேற்றிறவு ஐந்திருமேனிகள் ஊர்வலம் நடந்தது. தேரோட்டத்தையொட்டி மயிலாப்பூரில் பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தண்ணீர் பந்தல் அமைத்து மோர், குளிர்பானம் போன்றவை வழங்கப்பட்டன.
பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான அறுபத்து மூவர் உலா இன்று நடக்கிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் அறுபத்து மூவர் திருவிழாவை காண வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.