

காஞ்சிபுரம் அருகே வெங்கச்சேரி பகுதியில் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.
கடந்த மாதம் பெய்த தொடர் கனமழை காரணமாக காஞ்சிபுரம் அடுத்த மாகரல் பகுதியில் உள்ள செய்யாற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் வெங்கச்சேரி தரைப்பாலம் துண்டு துண்டாக உடைந்தது. பாலத்தின் கீழே புதைக்கப்பட்ட ராட்சத குழாய்கள் வெளியே தெரிகின்றன.
இதனால் இந்தப் பகுதியில் கடந்த 25 நாட்களாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்தது. எனவே வெங்கச்சேரி, திருப்புலிவனம், கருவேப்பம்பூண்டி, ஆர்ப்பாக்கம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தரைப்பாலத்தை கடக்க முடியாமல் சுமார் 30 கி.மீ. தூரம் சுற்றிக் கொண்டு செல்கின்றனர்.
தற்போது ஆற்றில் வெள்ளம் குறைந்துள்ள நிலையில் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆபத்தை உணராமல் உடைந்த பாலத்தின் ஓரத்திலும், குழாய்களை தாண்டியும் நடந்து செல்கின்றனர். சற்று கவனக் குறைவாக இருந்தாலும் குழாய்களுக்கு இடையில் இருக்கும் பள்ளத்தில் விழும் ஆபத்து உள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டே இந்த பாலம் சேதமடைந்துவிட்டது. அப்போதே இந்தப் பகுதியில் மேம்பாலம் அமைத்திருக்க வேண்டும். ஆனால் சேதமடைந்த பாலத்தை அரசு அதிகாரிகள் மண் கொட்டி கட்டைகளை கட்டி தற்காலிகமாக சீரமைத்தனர். இது தற்போது மேலும் மோசமாக சேதமடைந்துள்ளது. இந்தப் பகுதியில் உடனடியாக மேம்பாலம் அமைக்க வேண்டும். அதுவரை பொதுமக்கள் சென்று வர தற்காலிக பாதையை ஏற்படுத்த வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.