மாணவர்கள் நலன் கருதி அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நூலகங்கள்: முதல்வருக்கு பபாசி கோரிக்கை

மாணவர்கள் நலன் கருதி அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நூலகங்கள்: முதல்வருக்கு பபாசி கோரிக்கை
Updated on
1 min read

மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நூலகங்களை ஏற்படுத்த வேண்டும் என்று பபாசி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் (பபாசி) தலைவர் எஸ்.வயிரவன், செயலாளர் எஸ்.கே.முருகன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

அனைத்து பள்ளிகளிலும் நூலக பாட வேளையை கட்டாயம்பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதை பபாசி வரவேற்கிறது. அனைத்து பள்ளிகளிலும் வாரம் ஒருமுறை நூலக பாடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அரசாணை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சிக்குரியது.

முன்பெல்லாம் பள்ளி, கல்லூரிகளில் நீதி வகுப்பு மற்றும் நூலக வாசிப்புக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இதற்காக நூலகர்களும், ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். இதன்மூலம் பள்ளி மற்றும் கல்லூரி பாடப் புத்தகங்களோடு பொது நூல்களும் படிக்கும் ஆர்வம் மாணவர்கள் இடையே இருந்தது.

பள்ளிப் படிப்போடு பொது மற்றும் இலக்கிய புத்தகங்களை படிக்கும்போது மாணவர்கள் அறிவார்ந்தவர்களாக, அறிஞர்களாக, மதிப்புமிக்க பொறுப்பாளர்களாக உயர முடிந்தது. அத்துடன் மாணவர்களின் மனநிலையும் ஆரோக்கியமாக இருந்தது. பின்னர் அந்நிலை மாறியது.

இத்தகைய சூழலில், தற்போது, மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு நூலக பாடத்துக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதற்கு அனைத்து பதிப்பாளர்கள் சார்பில் தமிழக முதல்வர், பள்ளிக் கல்வி அமைச்சர், பள்ளிகல்வி ஆணையர் மற்றும் அதிகாரிகளுக்கு பபாசி நன்றி தெரிவிக்கிறது.

மாணவர்கள் நலன் கருதி, அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் நூலகங்களை உருவாக்கிமாணவர்களுக்கு பயன்படும் புத்தகங்களை தேர்வு செய்துவதுடன், பதிப்பாளர்களிடம் அந்த புத்தகங்களை வாங்கி அரசு உதவ வேண்டும். அதற்கான நிதி ஆதாரத்தை பள்ளிகளுக்கு அரசு தரவேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in