

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன் (34). இவர், தனியார் செல்போன் கோபுரம் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பணி நிமித்தமாக வேலூர் சேண்பாக்கம் நேதாஜி சாலையில் உள்ள வாடகை கட்டிடத்தில் முரளி கிருஷ்ணன் அறை எடுத்து தங்கியிருந்தார். அந்த அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது நேற்று முன்தினம் இரவு தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின்பேரில், வேலூர் வடக்கு காவல் துறையினர் விரைந்து சென்று முரளிகிருஷ்ணன் உடலை மீட்டனர். அவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரித்தபோது, ‘பிட் காயின்’ எனப்படும் ஆன்லைன் வர்த்தகத்தில் சில மாதங்களுக்கு முன்பு ரூ.45 லட்சம் அளவுக்கு முதலீடு செய்து பணத்தை இழந்துள்ளார். அவரது குடும் பத்தினர் அந்த கடனை அடைத் துள்ள நிலையில், மீண்டும் ரூ.5 லட்சம் அளவுக்கு முதலீடு செய்து ஏமாந்துள்ளார். இதனால், வேதனை அடைந்த முரளி கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
‘கிரிப்டோ கரன்சி’ என்பது காகிதப் பணத்துக்கு பதிலான டிஜிட்டல் வடிவில் இருக்கும் காகிதமில்லாத பணம் ஆகும். இதில் பிட் காயின், ஹித்தேரியம் என பல பெயர்களில் டிஜிட்டல் பணத்தில் ஏராளமானவர்கள் முதலீடு செய்து வருகின்றனர். இதில், முதலீடு செய்து ஏமாந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து வேலூர் மாவட்ட சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய் வாளர் அபர்ணா, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘கிரிப்டோ கரன்சியில் பயனாளர் முகவரியை வாங்குவது கடினமாக உள்ளது. அதை வாங்குவதற்காக பலரும் முதலீடு செய்து பணத்தை ஏமாந்து வருகின்றனர்.
இந்தியாவில் கிரிப்டோ கரன்சிக்கு ரிசர்வ் வங்கி இதுவரை அனுமதி அளிக்காத நிலையில் அதில் முதலீடு செய்து பணத்தை ஏமாற வேண்டாம். பிட் காயின் வாங்குவது போன்ற கிரிப்டோ கரன்சி முதலீடுகள் போன்றவை லாட்டரியை போன்றது. ஆரம்பத்தில் லாபம் வருவதுபோல் காண்பிக்கப்பட்டு கடைசியில் நஷ்டம்தான் ஏற்படும்’’ என்றார்.