அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.86 கோடி வசூலித்து மோசடி: போலீஸார் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.86 கோடி வசூலித்து மோசடி: போலீஸார் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் ரூ.1.86 கோடி பெற்று மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த ஜே.ஸ்ரீதரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

அரசு போக்குவரத்துக்கழகத்தில் உதவி மேலாளராக பணிபுரிகிறேன். சரவணன் என்ற ஓட்டுநர் மூலம் திருச்சி மாவட்டம் வழுதையூரை சேர்ந்த வி.எஸ்.தென்னரசு என்பவர் எனக்கு அறிமுகமானார்.

‘முன்னாள் போக்குவரத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை எனக்கு நன்றாகத் தெரியும். அமைச்சரின் நேர்முக உதவி யாளர்கள் ரமேஷ், சண்முகம், கார்த்திக் ஆகியோர் என் நண்பர்கள். விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநரின் உறவினரான கண்ணன், முக்கிய அரசியல் பிரமுகரான ராவணன், அவரது உறவுக்காரர் கார்த்திக் ஆகியோரையும் தெரியும். இவர்கள் மூலமாக அரசு போக்குவரத்துக் கழகத்தில் 50 பேருக்கு மேல் ஓட்டுநர், நடத்துநர் வேலை வாங்கிக் கொடுத்துள்ளேன். இந்த பணிகளுக்கு நேர்காணல் கடிதம் பெற்றுள்ளவர்கள் யாராவது இருந்தால் கூறுங்கள். அவர்களுக்கு பணி நியமன உத்தரவு பெற்றுத் தருகிறேன்’ என்று தென்னரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் என்னிடம் கூறினார்.

அதை நம்பி, என் ஊரை சேர்ந்த சிலரது விவரங்களை தென்னரசுவிடம் தெரிவித்தேன். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி அவர்களிடம் ரூ.1 கோடியே 86 லட்சத்து 50 ஆயிரத்தை தென்னரசு பெற்றார். 3 பேருக்கு மட்டுமே ஓட்டுநர் வேலை வாங்கிக் கொடுத்தார். மற்றவர்களுக்கு வேலை வாங்கித் தரவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை.

இதனால், பணம் கொடுத் தவர்களுடன் தென்னரசுவின் வீட்டுக்கு சென்று பணத்தை திருப்பிக் கேட்டேன். மொத்த தொகையில் ரூ.66.50 லட்சத்தை மட்டுமே தந்தார். ரூ.1 கோடியே 14 ஆயிரத்தை தரவில்லை.

இதுகுறித்து சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கடந்த மார்ச் 7-ம் தேதி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, உதவி காவல் ஆணையர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை நியமித்து, என் புகார் மனு மீது வழக்கு பதிவு செய்து, விசாரிக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

நீதிபதி ஆர்.மாலா முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இதுகுறித்து போலீஸார் ஒரு வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in