

காசோலை மோசடி வழக்கில் திமுக பிரமுகருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி ஆம்பூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரிய கொம்மேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (52). இவர் திமுக கிளைச்செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். பெரிய கொம்மேஸ்வரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு ஆம்பூர் அடுத்த பெத்லகேம் பகுதியைச் சேர்ந்த அரங்கநாதன் என்பவர் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில் ரூ.2.60 லட்சம் பணத்தை சேகர் கடனாக பெற்றுள்ளார். இந்த பணத்தை திருப்பி கொடுப்பதாக கூறி சேகர் காசோலை ஒன்றை அரங்கநாதனிடம் வழங்கினார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது அதில் பணம் இல்லை என திரும்பியது. இது தொடர்பாக அரங்கநாதன் ஆம்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதில், சேகர் பணம் பெற்று காசோலை வழங்கி மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, காசோலை மோசடி செய்த வழக்கில் திமுக கிளைச் செயலாளர் சேகருக்கு 6 மாதம் சிறை தண்டனையும், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத பட்சத்தில் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை வழங்கி ஆம்பூர் ஒருங்கிணைந்த குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கனிமொழி நேற்று தீர்ப்பளித்தார்.