

மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படும் முதுகுளத்தூர் கல்லூரி மாணவர் உடலை மறுபிரேத பரிசோதனை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமாநாதபுரம் மாவட்டத்தில், போலீஸாரால் விசாரணைக்கு காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் வீட்டுக்கு அனுப்பப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்த மனு இன்று மதுரை உயர் நீதிமன்றம் கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மாணவரின் உடல் மறு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் நீர்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ராமலெட்சுமி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
எனது கணவர் மாற்றுத்திறனாளி. எங்களுக்கு நான்கு மகன்கள். மூத்த மகன் மணிகண்டன் (21). இவர் முத்துராமலிங்க தேவர் நினைவு கல்லூரியில் படித்து வந்தார். டிச. 4-ல் மணிகண்டன் நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் உரம் வாங்க சென்றார். கீழத்தூவல் காளி கோவில் அருகே போலீஸார் லட்சுமணன், பிரேம்குமார் ஆகியோர் மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு கூறினர். மணிகண்டன் மோட்டார் சைக்கிளை நிறுத்தாததால் அவரை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து மணிகண்டனை போலீஸார் கடுமையாக தாக்கியுள்ளனர்.
பின்னர் என்னை போனில் அழைத்த போலீஸார் காவல் நிலையம் வந்து மணிகண்டனை அழைத்துச் செல்லுமாறு கூறினர். மணிகண்டனை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் போது உடல் முழுவதும் வலிப்பதாகவும், போலீஸார் கடுமையாக தாக்கியதாகவும் கூறினார். மறுநாள் மருத்துவமனை செல்லலாம் எனக் கூறியிருந்த நிலையில் அதிகாலை 1.30 மணியளவில் மணிகண்டன் உயிரிழந்தார். போலீஸார் தாக்கியதில் என் மகன் உயிரிழந்துள்ளார். என் மகன் உடலை மறுபிரேத பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் வாதிடுகையில், ’’மணிகண்டனை போலீஸார் கடுமையாக தாக்கியுள்ளனர். அவர் 3 முறை ரத்த வாந்தி எடுத்துள்ளார். அதன் பிறகே இறந்துள்ளார். மணிகண்டனிடம் போலீஸார் 3 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் போலீஸார் 2 நிமிட சிசிடிவி பதிவை மட்டுமே வெளியிட்டுள்ளனர்’’ என்றார்.
இதையடுத்து, ''மணிகண்டனின் உடலை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும். அதை முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். மறு பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலை பெற்றுக்கொள்வதாக மனுதாரர் தரப்பில் உறுதியளிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில் இருந்து இடுகாட்டிற்கு உடல் கொண்டு செல்லும் வரை போலீஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும்'' என நீதிபதி உத்தரவிட்டார்.