Published : 07 Dec 2021 05:37 PM
Last Updated : 07 Dec 2021 05:37 PM

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகை வழங்க வேண்டும்: அன்புமணி

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகை வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கரோனாவுக்குப் பிறகு மீண்டும் அனைத்து ரயில்களும் இயங்க இந்திய ரயில்வே அனுமதித்துள்ளது. எனினும் நிறுத்தி வைக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகை மீண்டும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்த பதிவுகளில் கூறியுள்ளதாவது:

''இந்தியாவில் அனைத்து ரயில்களும் கரோனா பரவலுக்கு முந்தைய கால அட்டவணைப்படி இயங்கத் தொடங்கிவிட்டன. ஆனால், கரோனா கட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகை மீண்டும் வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது.

மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகையை வசதி படைத்தவர்கள் பயன்படுத்துவதில்லை. ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு இந்தக் கட்டணச் சலுகை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மூத்த குடிமக்களுக்குப் பயனளிக்கும் கட்டணச் சலுகையை நிறுத்தி வைப்பது நியாயமல்ல.

மூத்த குடிமக்களுக்கு வருவாய் ஆதாரம் இல்லை. அவர்களில் பலர் கட்டணச் சலுகைக்காகவே ரயிலில் பயணிக்கிறார்கள். இவற்றைக் கருத்தில் கொண்டு மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க ரயில்வே வாரியம் முன்வர வேண்டும்''.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x