Published : 07 Dec 2021 03:47 PM
Last Updated : 07 Dec 2021 03:47 PM

ரஜினியுடன் சசிகலா சந்திப்பு

ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலா இன்று சந்தித்துப் பேசினார். அப்போது அவரது உடல்நிலை குறித்துக் கேட்டறிந்ததுடன், தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.

டெல்லியில் அக்டோபர் 25-ம் தேதி நடைபெற்ற தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. சென்னை திரும்பிய ரஜினி, குடும்பத்தினருடன் தனது நடிப்பில் உருவான ‘அண்ணாத்த’ திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்தார். இந்நிலையில், அக்டோபர் 28-ம் தேதி ரஜினிக்கு மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் உடனடியாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டதில், மூளைக்குச் செல்லும் கழுத்துப் பகுதியில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து, அடைப்பைச் சரிசெய்தனர். அவருக்கு ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், அவரது உடல்நிலையை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வந்தனர்.

சிகிச்சைக்குப் பின்னர், ரஜினியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அக்டோபர் 31-ம் தேதி
ரஜினிகாந்த் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். தற்போது ரஜினிகாந்த் ஓய்வெடுத்து வருகிறார்.

இந்நிலையில் ரஜினிகாந்தை சசிகலா இன்று சந்தித்தார். போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. ரஜினியின் உடல்நிலை குறித்துக் கேட்டறிந்த சசிகலா, தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்காக ரஜினிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

கோயில் தரிசனம், தொண்டர்களிடம் பேசுதல், பொது நிகழ்ச்சிகள், கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்குதல், அறிக்கை வெளியிடுதல் என்று சசிகலா தொடர்ந்து அரசியல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x