அதிமுக நிர்வாகிகள் பதவியை அங்கீகரிக்கத் தடை கோரிய வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

அதிமுக தேர்தலில் தேர்வான நிர்வாகிகளை அங்கீகரிக்கக் கூடாது எனத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதிமுக கட்சி விதிப்படி 21 நாட்கள் அவகாசம் வழங்காமல் தேர்தல் நடத்தப்படுவதால், தேர்தல் முடிவுகளை அறிவிக்கத் தடை கோரி ஓசூரைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் ஜெயச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

மனுவில், தேர்தலில் போட்டியிட எவருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை என்றும், ஒரு கோடியே 50 லட்சம் உறுப்பினர்கள் உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் வெளியிடவில்லை என்றும் கூறியுள்ளார். போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் செயல்படுவதாகக் கூறி, தேர்தல் ஆணையத்துக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இருவரின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கத் தேர்தல் ஆணையத்துக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த மனு, தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, உட்கட்சித் தேர்தலில் தேர்தல் ஆணையத்துக்கு என்ன பங்கு என்றும், எந்தப் பங்கும் இல்லாமல் தேர்தல் ஆணையத்தைச் சேர்த்ததால் வழக்கு விசாரணைக்கு உகந்ததா என ஆராய வேண்டும் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு விளக்கமளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பிரசாத், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட கட்சியில் நடந்த தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை என்பதாலும், ஜனநாயகம் சம்பந்தப்பட்டுள்ளதால் வழக்கு விசாரணைக்கு உகந்ததுதான் என்றும் வாதிட்டார்.

மேலும், வாக்குரிமை என்பது அரசியல் சட்ட உரிமை என்றும், அரசியல் சாசனத்தின் ஜனநாயக உரிமையை மீறிச் செயல்படும்போது அதை எதிர்த்து வழக்குத் தொடரலாம் என பிசிசிஐ வழக்கில் தெரிவிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார். மேலும், அடிப்படை உறுப்பினர்களும் தேர்தலில் போட்டியிட அனுமதி எனத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும், தேர்தலுக்கு முந்தைய நாள், போட்டியின்றி இருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, உட்கட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் இந்திய தேர்தல் ஆணையத்தை இணைத்துள்ளதால், வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in