Published : 07 Dec 2021 04:04 PM
Last Updated : 07 Dec 2021 04:04 PM

சிட்கோ தொழில் மனைகளின் விலை குறைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாகத் தொழில் முடக்க நிலையிலிருந்து தொழில்முனைவோர் மீள சிட்கோ தொழில் மனைகளின் விலையைக் குறைப்பதாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சிட்கோ தொழில் மனைகளின் விலையைக் குறைக்க வேண்டும் என்று நீண்ட நாளாக தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன சங்கங்கள் முன்வைக்கும் கோரிக்கையை ஏற்று, கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக தொழில் முடக்க நிலையிலிருந்து தொழில்முனைவோர் மீள சிட்கோ தொழில் மனைகளின் விலையைக் குறைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''தமிழகத்தைத் தொழில் வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் திகழச் செய்ய இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலத்தின் தொழில் துறை வளர்ச்சிக்கு அடித்தளமாக விளங்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைகளை ஊக்குவிக்க சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, இவ்வரசு பொறுப்பேற்றவுடன், தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன சங்கங்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிட்கோ தொழில் மனைகளின் விலையைக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள தொழில் முடக்க நிலையிலிருந்து தொழில்முனைவோர் மீளவும் வழிவகை செய்யும் பொருட்டு தற்போது, தொழில் மனைகளின் விலையைக் குறைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 50 ஆண்டுகள் கடந்து தனது சேவையினை வழங்கி வரும் தமிழ்நாடு சிட்கோ வரலாற்றில் முதல் முறையாக, தொழில் மனைகளின் அதிக விலை காரணமாக பல வருடங்களாக ஒதுக்கீடு செய்யப்படாமல் காலி மனைகளைக் கொண்ட தொழிற்பேட்டைகளின் மனை மதிப்பினை மிகக்கணிசமாகக் குறைத்துள்ளது.

தொழில்மனைகளின் விலை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு தொழிற்பேட்டைகளில் மனைமதிப்பு தொழில்முனைவோர் எளிதில் வாங்கிடும் அளவில் குறைந்துள்ளது. உதாரணமாக, ஊத்தங்கரை தொழிற்பேட்டையில் ஏக்கர் ஒன்றிற்கு ரூபாய் 1,19,79,000/-லிருந்து 75% குறைத்து ரூபாய் 30,81,200/-, கும்பகோணத்தில் ரூபாய் 3,04,92,000/-லிருந்து 73% குறைத்து ரூபாய் 81,89,300/- மற்றும் நாகப்பட்டினத்தில் ரூபாய் 2,39,71,500/-லிருந்து சுமார் 65% குறைத்து ரூபாய் 85,35,800/- எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தற்போதைய மனை மதிப்பிலிருந்து ஏக்கர் ஒன்றிற்கு கோயம்புத்தூர் மாவட்டம் குறிச்சியில் ரூபாய் 9.0 கோடியிலிருந்து 4.8 கோடி குறைத்து ரூபாய் 4.2 கோடியாகவும், திருப்பத்தூர் மாவட்டம், விண்ணமங்கலத்தில் ரூபாய் 4.8 கோடியிலிருந்து ரூபாய் 2.8 கோடி குறைத்து ரூபாய் 2 கோடியாகவும், செங்கல்பட்டு மாவட்டம், ஆலத்தூரில் ரூபாய் 6 கோடியிலிருந்து ரூபாய் 2.5 கோடி குறைத்து ரூபாய் 3.5 கோடியாகவும் மற்றும் ஈரோடு தொழிற்பேட்டையில் ரூபாய் 6.4 கோடியிலிருந்து ரூபாய் 2.6 கோடி குறைத்து ரூபாய் 3.8 கோடியாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதிக விலை மதிப்பினால் பல வருடங்களாகக் குறைவான மனைகளே ஒதுக்கீடு செய்யப்பட்டு 400-க்கும் மேற்பட்ட காலி தொழில் மனைகளைக் கொண்ட காரைக்குடி, பிடாநேரி, ராஜபாளையம் தொழிற்பேட்டைகளின் மனை மதிப்பு 30% முதல் 54% வரையிலும் மற்றும் விருதுநகர், அரக்கோணம், பர்கூர் தொழிற்பேட்டைகளின் மனை மதிப்பு 40% முதல் 50% வரையிலும் குறைக்கப்பட்டுள்ளதுடன் 19 தொழிற்பேட்டைகளின் மனை மதிப்பும் சுமார் 5% முதல் 25% வரை குறைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், 12 தொழிற்பேட்டைகளுக்கு 2016-2017ஆம் ஆண்டில் இருந்த மனை மதிப்பே நடப்பாண்டிற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அம்பத்தூர் மற்றும் திருமழிசை தொழிற்பேட்டைகளுக்கு நடப்பிலுள்ள நடைமுறைகளின்படி ஏக்கர் ஒன்றிற்கு முறையே ரூபாய் 43,86,16,300/-, ரூபாய் 13,41,09,300/- என நிர்ணயம் செய்யப்பட வேண்டியதற்கு மாறாக 2016-2017ஆம் ஆண்டின் ரூபாய் 25,07,79,100/-, ரூபாய் 7,66,77,400/- என்ற மனை மதிப்பே 2020-2021ஆம் ஆண்டிற்கான மனை மதிப்பாகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளின் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர் குறைவான விலையில் மனை ஒதுக்கீடு பெற்று தொழில் தொடங்க முடியும் என்பதால் தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பின் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்முனைவோர் தொழில் மனைகள் ஒதுக்கீடு பெற்றுப் பயனடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்''.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x