போலீஸாருக்கு சீருடைப் படியாக இனி ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம்: புதுவை அரசு ஒப்புதல்

போலீஸாருக்கு சீருடைப் படியாக இனி ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம்: புதுவை அரசு ஒப்புதல்
Updated on
1 min read

போலீஸாருக்கு சீருடைப் படியாக இனி ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க புதுவை அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐந்து ஆண்டுகளாக வழங்கப்படாமல் சீருடைப் படி பாக்கி புதுச்சேரி போலீஸாருக்கு உள்ள சூழலில், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி சீருடைப் படி ரூ.10 ஆயிரமாக மத்திய அரசு நிர்ணயித்துள்ளதைத் தர புதுச்சேரி நிதித்துறை ஒப்புதல் தந்துள்ளது.

சீருடைப் படி இம்மாதத்துக்குள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், பாக்கியுள்ள நான்கு ஆண்டுகளுக்கான தொகையைத் திருப்பித் தருவது பற்றி நிதித்துறை எவ்விதத் தகவலும் தெரிவிக்கவில்லை.

புதுச்சேரி காவல்துறையில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பணிபுரிந்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் போலீஸாருக்கு சீருடை வழங்கப்படும். கடந்த 2017-ல் இருந்து சீருடைக்கு பதில் அவரவர் வங்கிக் கணக்கில் பணம் தர முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் சீருடைக்கான தொகை ஐந்து ஆண்டுகளாகத் தரப்படவில்லை. இதனால் போலீஸார் அவரவர் சொந்த செலவில் வாங்கத் தொடங்கினர்.

இதுகுறித்து புதுச்சேரி நிதித்துறை சார்பு செயலர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் கூறியுள்ளதாவது:

''ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் மீது அரசாங்கம் எடுத்த முடிவுகளின் விளைவாக, சீருடை அலவன்ஸ்கள் தொடர்பான தற்போதைய உத்தரவுகளை ரத்து செய்து புதிய உத்தரவுகள் அமலாகின்றன. அதன்படி சீருடைப் படியின் கீழ் சீருடை, ஷூ, சலவை ஆகியவை மொத்தமாக உள்ளடக்கி ஒரே சீருடைப் படியாகத் தரக் குடியரசுத் தலைவர் நிர்ணயம் செய்துள்ளார். அதன்படி புதுச்சேரி போலீஸாருக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் தரப்படும்.

இதன் மூலம் சீருடைப் படியைத் தவிர்த்து சீருடைப் பராமரிப்பு, சீருடை சலவை மற்றும் ஷூவுக்குத் தனியாகத் தொகை தரப்படாது. இனி ஆண்டுதோறும் ஜூலை மாத ஊதியத்தின்போது இத்தொகை வரவு வைக்கப்படும் என்ற இவ்வுத்தரவை மத்திய அரசின் நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இவ்வுத்தரவு புதுச்சேரியில் அமலாகிறது. அதன்படி புதுச்சேரியில் சீருடைப் படியானது நடப்பு டிசம்பரில் இருந்து அமலாகிறது. வரும் 2022-23ஆம் நிதியாண்டில் ஜூலை மாதத்திலிருந்து போலீஸார் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்''.

இவ்வாறு அர்ஜூன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

போலீஸார் தரப்பில் கூறுகையில், "நடப்பு நிதியாண்டுக்கான சீருடைப் படி மட்டும் வழங்க நிதித்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கான சீருடைப்படி பாக்கி பற்றி அரசு எவ்விதத் தகவலும் தெரிவிக்கவில்லை. பாக்கியுள்ள தொகையையும் அரசு தரவேண்டும்" என்று கோருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in