கரூரில் குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை: காவல்துறையினர் விசாரணை

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

கரூர் மாவட்டத்தில் விவசாயக் கிணற்றில் குதித்து குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் அருகேயுள்ள செம்பியநத்தத்தை அடுத்த பூசாரி பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் (33). கரூர் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் தையல் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் மனைவி சரண்யா (30). இவர்களுக்கு கனிஷ்கா (6), பூவிஷா (3) என இரு மகள்கள்.

சரண்யா நூறு நாள் வேலைக்குச் சென்று வருவதுடன், அவ்வப்போது கரூரில் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் வேலைக்குச் செல்வார் எனக் கூறப்படுகிறது. சரண்யா சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சக்திவேல் நேற்று நள்ளிரவு எழுந்து பார்த்தபோது சரண்யா மற்றும் குழந்தைகளைக் காணவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து தேடியபோது அவர்களது விவசாயக் கிணற்றில் குழந்தைகளுடன் தாய் குதித்தது தெரியவந்தது.

இதையடுத்து பாலவிடுதி போலீஸாருக்குத் தகவல் அளித்ததன் பேரில் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் காவல்துறையினர் அளித்த தகவலின் பேரில் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சரண்யா, இரண்டாவது குழந்தை பூவிஷா ஆகியோரது சடலங்களைத் தீயணைப்பு வீரர்கள் மீட்டுப் பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in