Last Updated : 07 Dec, 2021 03:06 AM

 

Published : 07 Dec 2021 03:06 AM
Last Updated : 07 Dec 2021 03:06 AM

பழங்குடி மக்களின் சிதைந்துவிட்ட சிறு வனப் பொருள் சேகரம்

"பாரம்பரியமாக வனத்தில் வாழும் மக்கள், தங்கள் கிராமங்களிலும் தங்கள் கிராம எல்லைக்கு வெளியிலும் சிறு வனப் பொருட்களை சேகரிக்கவும், பயன்படுத்தவும், வாழ்வாதார தேவைகளுக்காக விற்கவும் உரிமை இருக்கிறது" என்று வன உரிமைச் சட்டம் 2006 அத்தியாயம் இரண்டு, பிரிவு சி கூறுகிறது. ஆனால், வன உரிமைச் சட்டம் அமலுக்கு வராத காலத்தில் என்னென்ன சிறு வனப் பொருட்களை சேகரித்து விற்று வந்தார்காளோ, அதனைக் கூட சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னும் சாத்தியம் இன்றி தவிக்கின்றனர் பழங்குடிகள்.

பழங்குடிகளின் பூர்வீக வாழ்வாதாரம்

ராகி, அவரை உள்ளிட்ட உணவுப் பயிர் கள் தேவைக்கு ஏற்ப சாகுபடி. சிறு வனப் பொருட்களை தேவைக்கு தக்கவாறு சேகரித்து விற்றல். காட்டில் கிடைக்கும் கீரைகள், பழங்கள், சிறு விலங்குகள் வேட்டை ஆகியவையே அவர்களின் முந்தைய வாழ்வாதார நடைமுறை. இதில், சிறு விலங்குகள் வேட்டை என்றோ தடை செய்யப்பட்டு விட்டது. சிறு வன மகசூல் சேகரிப்பு சற்றேறக்குறைய நின்று போன நிலையில் இருக்கிறது. சில பொருட்கள் மாத்திரம் பெருத்த இன்னல்களுக்கு இடையே சேகரிப்பட்டு வருகிறது.

முக்கியமான சிறு வனப் பொருட்கள்

தேன் எடுத்தல், நெல்லிக்காய், சாதிக்காய், பூசங் கொட்டை, மாவள்ளிக் கிழங்கு, புளியங் கொட்டை, மரப்பாசி, சீமார் புல் போன்றவற்றை சேகரித்து விற்று வந்தனர். சிறு வனப் பொருட்களை சேகரிப்பதிலும், அதனை விற்பனை செய்வதிலும், ஊக்குவிப்புகள் பல செய்து, பழங்குடிகளின் வேலை வாய்ப்பை பெருக்கி இருக்க முடியும். அதற்கு மாறாக, சிறு வனப் பொருட்கள் சேகரிப்புக்கு இடையூறு களை உருவாக்கி, சிறு வனப் பொருட்கள் சேகரிப்பு என்பதே முற்றாக அழிந்து விடும் சூழல் உருவாகியுள்ளது.

தேன் எடுத்தல்

ஓரிடத்தில் 100 முதல் 150 அடைகள் மலைத் தேன் இருப்பதாக கொண்டால், அதனை சேகரிக்க, 10 முதல் 12 நபர்கள் தேவை. மூன்று முதல் நான்கு நாட்கள் வரை இரவு பகலாக அங்கேயே தங்கி வேலை செய்ய வேண்டும். தேன் எடுத்தல் என்பது இருட்டத் தொடங்கியது முதல், அதிகாலை நான்கு மணி வரை மட்டுமே சாத்தியம். மீண்டும் இரவு வரை காத்திருக்க வேண்டும். தேன் இருக்கும் இடத்தில் இறங்க தேவையான ஆச்சா நார் கயிற்றால் தயார் செய்த நீண்ட கயிற்று ஏணி தயார் செய்தல்.‌ புகை மூட்டத் தேவையான பொருட்கள், சிறு மூலிகைகள் என பெரும் தயாரிப்புகள் இதற்கு தேவை.

இவ்வளவு தயாரிப்புகள் முடிந்து, இறுதியில் 500 கிலோ முதல் 1,000 லிட்டர் வரை தேன் சேகரிக்க முடியும். தேன் எடுக்கும் வேலையில் தேர்ந்த கலைஞர்கள் முதல், அவர்களுக்கு உதவி செய்யும் பல ஆட்கள் தேவை. வருடத்தில் இரண்டு பருவங்களில் தேனைச் சேகரிக்க முடியும். மிகச் சாதாரணமான மலைத் தேன் லிட்டர் ஒன்றுக்கு 700 முதல் 1,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இவ்வளவு இருந்தும், தேன் சேகரித்தல் என்பதை ஒரு வேலைவாய்ப்பாக, நல்ல வருவாய் ஈட்டும் தொழிலாகக் கருதி அதில் ஈடுபட முடியாத நிலையில் பழங்குடிகள் உள்ளனர்.

பழங்குடிகள் அவர்களாக தேனை எடுக்கவும் விற்கவும் அனுமதி இல்லை. பெரும்பாலான தேன் சேகரிப்பு வனத்துறையினர் வாயிலாகவே நடக்கிறது. இதில் கிடைக்கும் வருமானத்தை அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள். தேன் எடுக்கும் வேலைக்கு பழங்குடிகள் வெறும் கூலிகளாக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர். டின் கணக்கில் அல்லது குடம் குடமாக தேனை சேகரித்துக் கொண்டு வீடு திரும்பும்போது, ஆட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒரு தொகையைக் கொடுத்துச் செல்கின்றனர். அது இன்று அவர்கள் ஈட்டும் விவசாய கூலி அளவுகூட இருக்கும் என்று கூற இயலாது. மொத்தத்தில், மலைத் தேன் மருத்துவ குணங்கள் உள்ளிட்ட மகத்துவம் மிக்கது. ஆனால் அதனை சேகரிக்கும் பழங்குடி மக்களின் குழந்தைகளோ குடும்பத்தினரோ ஆசைக்கு கூட அதைப் பயன்படுத்த முடிவதில்லை.

இதர வன சிறு வனப் பொருட்கள் சேகரிப்பு முடக்கம்

‌நெல்லிக்காய், சாதிக்காய், பூசங் கொட்டை, மாவள்ளிக் கிழங்கு, மரப்பாசி ஆகியவை ஒவ்வொன்றும் 15 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை பழங்குடிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வந்தவை. ஆனால் இன்று இவை யாவும் பழங்குடிகளுக்கு எட்டாக் கனியாக மாறிவிட்டது. நமது ஆய்வின் நிமித்தம் சந்தித்த 956 மனிதர்களில், பூசங் கொட்டை சேகரிப்பு 15 நாட்கள் வரை 6 பேருக்கும், ஒரு மாதம் வரை 14 பேருக்கும் வேலைவாய்ப்பு தருவதாகக் கூறினர். சாதிக்காய் சேகரிப்பு மூலம் 6 பேருக்கு வேலை கிடைப்பதாக தெரிவித்தனர். நெல்லிக்காய் சேகரிப்பு 98 பேருக்கு ஒரு மாதம் வேலைக்கு வழி வகுக்கிறது என்று கூறினர். மழைக் காலங்களில் மரங்களில் படரும் பாசி சேகரம் முற்றிலும் தடுக்கப்பட்டு விட்டது.

கொஞ்சம் நம்பிக்கை அளிக்கும் சீமார் புல்

பல சிறு வனப் பொருட்கள் சேகரிப்பு முற்றாக தடுக்கப்பட்டு விட்டாலும் 238 பேருக்கு வேலைவாய்ப்பை தந்து வருகிறது சீமார் புல் அறுப்பு. ஒரு மாதம் தொடங்கி 6 மாதங்கள் வரை சீமார் புல் அறுப்பு வேலைவாய்ப்பை தருகிறது. மலைப் பகுதிகளில் உள்ள சமவெளி பகுதிகளில்தான் சீமார் புல் விளைகிறது.

ஒவ்வொரு பகுதியில் வாழும் பழங்குடிகளுக்கும் ஒவ்வொரு விதமான‌ வேலைவாய்ப்பை அது தருகிறது. சீமார் புல் இருக்கும் பகுதிக்குச் சென்று அங்கேயே 3 முதல் 4 மாதங்கள் முகாமிட்டு சீமார் புல் அறுப்பு முடிந்து வீடு திரும்புபவர்கள் இருக்கிறார்கள். கர்ப்பிணியாக அங்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கேயே குழந்தை பிறந்து எடுத்து வந்தவர்களும் இருக்கிறார்கள். சீமார் புல் சற்று அருகாமையில் கிடைக்கும் பகுதியில் வாழ்வோர் கால் நடையாக சென்று சீமார் புல்லை அறுத்து தலை சுமையாக இரவுக்குள் வீடு கொண்டு வந்து சேர்ப்போர் இருக்கிறார்கள்.

முதல் நாள் முழுக்க நடந்து, இரவு அங்கேயே தங்கி, மறுநாள் அறுத்துக் கொண்டு, மீண்டும் நடந்தே சென்று விற்போர் உண்டு. உண்ணிச் செடிகள் அதிகமாக வளர்ந்து, சீமார் புல்லை மூடி மறைத்து வேலை இழந்தவர்கள் இருக்கிறார்கள். யானை தாக்குதல்/ அச்சம் காரணமாக சீமார் புல் சேகரம் நின்ற பகுதிகள் இருக்கின்றன. சீமார் புல் சேகரிக்க செல்லும் வழித்தடம் மூடி மறைத்ததால் சீமார் புல் அறுப்பு நின்று விட்ட பகுதிகள் இருக்கின்றன. இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் சீமார் புல் அறுப்பு பழங்குடி மக்களுக்கு பெருமளவில் வேலை வாய்ப்பு வழங்குகிறது.

வனப் பொருட்கள் சேகரிப்புக்கு தடைகள் என்ன?

# 2006-ம் ஆண்டு வன உரிமைச் சட்டம் தெள்ளத் தெளிவாக இதற்கு அனுமதி வழங்குகிறது.

# புலிகள் சரணாலயம் என்ற பூச்சாண்டியே பிரதான தடுப்பு காரணியாக கூறப்படுகிறது. இதிலும் சட்டப்படியான தடைகள் ஏதும் இல்லை.

# வனத் துறையின் அதிகார துஷ்பிரயோகம். சிறு வனப் பொருட்களுக்கு அனுமதி அளித்தால் அதனை தவறாக பயன்படுத்துவார்கள் என்ற அச்சமும் காரணியாக கூறப்படுகிறது.

இவற்றை களைந்து மாநில அரசு நினைத்தால் வனப் பொருட்கள் சேகரிப்பை முழுமையாக ஊக்குவிக்கவும், மகசூலை பெருக்கவும், அவற்றை மதிப்புக் கூட்டி நல்ல விலைக்கு விற்று கணிசமாக வருவாய் ஈட்டவும் ஏற்பாடு செய்ய இயலும்.

கட்டுரையாளர்:

பொருளியல் துறைத் தலைவர், ஈரோடு கலை அறிவியல் கல்லூரி. இந்திய அரசின் ICSSR நிதி நல்கை பெற்ற ஆய்வாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x