Published : 07 Dec 2021 03:06 AM
Last Updated : 07 Dec 2021 03:06 AM

‘இந்து தமிழ் திசை’, ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’ நடத்திய ‘ஆளப்பிறந்தோம்’ இணையவழி வழிகாட்டு நிகழ்ச்சி; கடின உழைப்பும், சரியான வழிகாட்டுதலும் இருந்தால் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறலாம்: தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சி.எம்.வான்மதி உறுதி

எஸ்.டி. வைஷ்ணவி

சென்னை

கடின உழைப்பும், சரியான வழிகாட்டுதலும் இருந்தால் சிவில் சர்வீஸ் தேர்வில்வெற்றி பெறலாம் என்று மகாராஷ்டிர மாநிலத்தில் பணியாற்றி வரும் தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சி.எம்.வான்மதி கூறினார்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும்டிஎன்பிஎஸ்சி குருப்-1, குருப்-2 தேர்வுகளுக்கான ‘ஆளப்பிறந்தோம்’ இணையவழி வழிகாட்டு நிகழ்ச்சியை ஞாயிற்றுக் கிழமை நடத்தியது.

இதில் ஐஏஎஸ் அதிகாரி மற்றும் சிவில்சர்வீஸ், டிஎன்பிஎஸ்சி தேர்வு பயிற்சியாளர்கள் கலந்துகொண்டு சிவில் சர்வீஸ் தேர்வு, அதற்கு தயாராகும் முறை மற்றும்குருப்-1, குருப்-2 தேர்வுகள் குறித்து மாணவ, மாணவிகள் இடையே இணையவழியில் உரையாற்றினர். கருத்தாளர்களின் உரை விவரம் வருமாறு:

மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டஜில்லா பரிஷத் தலைமை நிர்வாக அதிகாரிசி.எம்.வான்மதி, ஐஏஎஸ்: நான் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தேன். எங்கள் பள்ளி விழாவில் பங்கேற்க மாவட்ட ஆட்சியராக இருந்த த.உதயச்சந்திரன் வந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட மரியாதையும், அவர் செய்த ஏராளமான வளர்ச்சிப் பணிகளுமே ஆட்சியராக வேண்டும் என்ற கனவை என்னுள் ஏற்படுத்தியது. என் கல்லூரி நூலகத்தில், ஐபிஎஸ் அதிகாரியான சி.சைலேந்திரபாபு எழுதிய ‘யூ டூ பிகம் ஆன் ஐபிஎஸ் ஆபீஸர்’ என்ற புத்தகத்தை படித்தேன். அதன்மூலம் சிவில் சர்வீஸ் தேர்வு குறித்து முழுமையாகத் தெரிந்துகொண்டேன்.

சிவில் சர்வீஸ் தேர்வு என்பது மிகவும்கடினமான தேர்வு அல்ல. அதேநேரத்தில் எளிதான தேர்வும் கிடையாது. கடின உழைப்பும், சரியான வழிகாட்டுதலும் இருந்தால், சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெறலாம். இதற்கான பாடத்திட்டம் சற்று அதிகம்தான். ஆனாலும் திட்டமிட்டு படித்தால் வெற்றி பெறலாம். தினமும் நாளிதழ்கள் படிப்பது, என்சிஇஆர்டி 6 முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள பாடப்புத்தகங்கள் படிப்பது சிவில் சர்வீஸ் தேர்வுக்கு அடிப்படை ஆகும்.

சிவில் சர்வீஸ் தேர்வில் கேள்விகள் கேட்கும் முறை ஆண்டுக்கு ஆண்டு மாறக்கூடியது. எனவே ஆண்டுதோறும் பாடங்கள் தொடர்பான விஷயங்களைப் புதுப்பித்துக் கொண்டே வரவேண்டும். நான் முதல் முயற்சியில் நேர்முகத்தேர்வு வரை சென்றாலும் அதில் வெற்றி பெறவில்லை. 4-வது முயற்சியில்தான் வென் றேன்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிப்பவர்கள் வங்கித்தேர்வு, எஸ்எஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெற்றுவிடலாம். எனவே, ஏதேனும் அரசு பணி வாய்ப்புஉறுதி. மெயின் தேர்வுக்கு தயாராகும்போது நிறைய மாதிரி தேர்வுகளை எழுதிப்பார்க்க வேண்டும். அப்போதுதான் நாம் செய்யும் தவறுகள் தெரிய வரும்.

சிவில் சர்வீஸ் தேர்வில் சிலர் முதல்முயற்சியிலேயே வெற்றிபெற்று விடுகிறார்கள். பலருக்கு 2 அல்லது 3 அல்லது 4 முயற்சிகள் தேவைப்படுகின்றன. இது ஒரு தொடர் பயணம். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியால் இந்த தேர்வுக்கான பாடங்கள், குறிப்புகள் இணையதளத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

சங்கர் ஐஏஎஸ் அகாடமி இயக்குநர் டாக்டர் எஸ்.டி. வைஷ்ணவி: 2004-ல்வெறும் 36 மாணவர்களுடன் தொடங்கப்பட்ட சங்கர் ஐஏஎஸ் அகாடமி, கடந்த 17 ஆண்டுகளில் 1,500-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் அதிகாரிகளை உருவாக்கியுள்ளது. 25 நாடுகளில் எங்கள் மாணவர்கள் ஐஎஃப்எஸ் அதிகாரிகளாக பணியாற்றுகிறார்கள். யுபிஎஸ்சிதேர்வுக்கு மட்டுமின்றி டிஎன்பிஎஸ்சி,எஸ்எஸ்சி, பேங்கிங் போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கிறோம்.

சிவில் சர்வீஸ் தேர்வு என்பது முதல்நிலை, மெயின், நேர்காணல் என 3 நிலைகளை உள்ளடக்கியது. முதல்நிலைத் தேர்வில் பொது அறிவு, சி-சாட் என்ற திறனறி தேர்வு ஆகிய 2 தாள்கள். ஒவ்வொன்றுக்கும் தலா 200 மதிப்பெண்.சி-சாட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும். பொது அறிவு தாளில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில்தான் மெயின் தேர்வுக்கு விண்ணப்பதாரர்களைத் தேர்வுசெய்கிறார்கள்.

மெயின் தேர்வில் மொத்தம் 9 தாள்கள். முதல் இரு தாள்களும் மொழித்தாள்கள். அவற்றுக்கு தலா 300 மதிப்பெண். இந்ததாள்களில் தேர்ச்சி பெற்றால் போதும். அடுத்து பொதுஅறிவு பாடத்தில் 4 தாள்கள். தொடர்ந்து கட்டுரை தாள். அதன்பிறகு விருப்பப் பாடத்தில் 2 தாள்கள். இந்த 7 தாள்களுக்கும் தலா 250 மதிப்பெண்கள்.

மொழித்தாள் தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்கள் மெரிட் பட்டியலுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. அதேநேரத்தில் இந்த தாள்களில் தேர்ச்சி பெற்றால்தான் இதர தாள்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். அந்த வகையில், கட்டுரை தாள், பொதுஅறிவு தாள்கள், விருப்பப் பாடத் தாள்கள்-இவற்றில் மொத்தமுள்ள 1,750 மதிப்பெண்ணுக்கு 800 முதல் 900 மதிப்பெண் எடுத்தால் நேர்காணலுக்கு தகுதி பெற்றுவிடலாம்.

நேர்காணலுக்கு 275 மதிப்பெண். மெயின் தேர்வு மதிப்பெண்,நேர்காணல் மதிப்பெண் இரண்டிலும் சேர்த்து (2025 மார்க்) 50 சதவீதம் என்ற அளவில் மதிப்பெண் பெற்றாலே நல்ல பணி உறுதி.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து, சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும் டிஎன்பிஎஸ்சி குருப்-1, குருப்-2ஏ தேர்வு தொடர்பாக எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு சங்கர் ஐஏஎஸ் அகாடமியின் மூத்த பயிற்றுநர் எஸ்.சந்திரசேகர், பயிற்றுநர் யு.சிவபாலன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.

இந்நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் ம.சுசித்ரா தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வை காண தவறவிட்டவர்கள் https://www.htamil.org/00154 என்ற லிங்க்கில் காணலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x