

அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரிக்கப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் தேர்தலுக்கு தடைவிதிக்க மறுத்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக அதிமுக தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளது.
இந்நிலையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக தொண்டரான ஓசூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக நேற்று விசாரிக்க வேண்டுமெனக் கோரி உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பாகவழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் முறையீடு செய்தார்.
அதையேற்க மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கை இன்று விசாரிப்பதாக தெரிவி்த்துள்ளனர். பின்னர்பிற்பகலில் மீண்டும் நீதிபதிகள் முன்பாக ஆஜரான அவர், ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி ஆகிய இருவரையும் போட்டியின்றி தேர்வுசெய்துள்ளதாக அறிவிக்கப் போகின்றனர். எனவே இந்த வழக்கை அவசர வழக்காக இன்று(நேற்று) மாலையே விசாரிக்க வேண்டுமென்றார். அதையேற்க மறுத்த நீதிபதிகள், அவ்வாறு தேர்வுசெய்யப்பட்டால் அதையும் எதிர்த்து கூடுதல் மனு தாக்கல்செய்யும்படி அறிவுறுத்தினர்.
உரிமையியல் நீதிமன்றத்தில் மனு
அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தலை எதிர்த்து, ஈரோடுமாவட்டம் அதிமுக மாணவரணிமுன்னாள் பொருளாளர் சி.பாலகிருஷ்ணன் சார்பில் வழக்கறிஞர் ஆர்.எம்.முத்துக்குமார், சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், தேர்தல் விதிகள் காற்றில்பறக்க விடப்பட்டுள்ளன. ஓ.பன்னீர்செல்வம், கே.பழனிசாமி ஆகியோர் தங்களது பதவியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமனை தேர்தல் அதிகாரிகளாக நியமித்துள்ளனர். எனவே தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி மணிமேகலை முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தபோது, அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் விஜய்நாராயணன், பி.எச்.அர்விந்த்பாண்டியன் ஆகியோர், ‘‘மனுதாரர் அதிமுகவில் இருந்துதிமுகவுக்கு சென்று, பின்னர் அமமுகவுக்கு சென்று, தற்போது அங்கிருந்தும் விலகி சசிகலாவுடன்இருப்பதை மனுவில் மறைத்துள்ளார். அவர் கட்சி உறுப்பினரே கிடையாது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக கே.பழனிசாமியும் போட்டியின்றி தேர்வாகி வி்ட்டதாகக் கூறி மனுவைதாக்கல் செய்தனர்.
அதையேற்ற நீதிபதி, இதுதொடர்பாக தேர்தல் ஆணையர்கள்மற்றும் அதிமுக தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜன.3-க்கு தள்ளிவைத்துள்ளார்.