Published : 08 Mar 2016 11:42 AM
Last Updated : 08 Mar 2016 11:42 AM

திமுக கூட்டணியில் தேமுதிக நிச்சயம் சேரும்: கருணாநிதி நம்பிக்கை

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் தேமுதிக சேரும் என்ற நம்பிக்கை நிச்சயமாக இருக்கிறது என்றார் திமுக தலைவர் கருணாநிதி.

சென்னை - அண்ணா அறிவாலயத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, திமுக வேட்பாளர்கள் நேர்காணல் குறித்த விவரங்களை வெளியிட்டார்.

அதன்படி, "பிப்ரவரி 22 முதல் 27 வரையிலும், மார்ச் 2 முதல் 8 வரையிலும் மொத்தம் 12 நாட்கள் நேர்காணல் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கழகத்தின் சார்பில் விண்ணப்பித்திருக்கும் 4,362 பேரும், புதுவை - காரைக்காலில் உள்ள

30 தொகுதிகளுக்கும் விண்ணப்பித்திருக்கும் 71 பேரும் என மொத்தம் 4,433 பேர் நேர்காணலில் கலந்து கொண்டார்கள்.

விண்ணப்பப் படிவங்கள் மொத்தம் 6,366 விற்பனை ஆன வகையில் 63 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயும், 5,661 பேர் விண்ணப்பக் கட்டணமாக செலுத்திய வகையில் மொத்தம் 12 கோடியே 37 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும் தலைமைக் கழகத்திற்கு செலுத்தப்பட்டிருக்கிறது" என்றார் கருணாநிதி.

பின்னர், திமுக - தேமுதிக கூட்டணி முடிவாகிவிட்டதா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "பழம் கனிந்து கொண்டிருக்கிறது; பாலில் எப்போது விழும் என்று இன்னும் முடிவாகவில்லை." என்றார்.

தேமுதிக கூட்டணி முடிவாவதில் ஏன் இந்தத் தாமதம்? இழுபறிக்கு என்ன காரணம்? அவர்களுடைய கோரிக்கை என்ன? என்றதற்கு, "இழுபறி எதுவும் கிடையாது. அதற்கு மேல் இப்போது எதுவும் சொல்வதற்கு இல்லை" என்று அவர் பதிலளித்தார்.

திமுக கூட்டணியில் தேமுதிக சேரும் என்று நம்புகிறீர்களா? என்று கேட்டதற்கு, "நம்பிக்கை நிச்சயமாக இருக்கிறது" என்றார்.

மேலும், "திமுக தேர்தல் அறிக்கை இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வெளியிடப்படும். திமுக கூட்டணியைப் பொறுத்தவரை வேறு எந்தக் கட்சிக்கும் அழைப்பு விடுக்கவில்லை" என்றார் கருணாநிதி.

அதேவேளையில், பாமக குறித்த கேள்விகளுக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.



Press Meet at Anna Arivalayam..!

Posted by >Kalaignar Karunanidhi on >Monday, 7 March 2016


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x