

தங்க நகைகளுக்கு விதிக்கப் பட்டுள்ள கலால் வரியை ரத்து செய்யக் கோரி நகைக் கடை உரிமையாளர்கள் 15-வது நாளாக நாடு முழுவதும் நேற்றும் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே, நாடு முழுவதும் உள்ள நகைக் கடை உரிமையாளர்கள் சங்கங்கள் சார்பில் டெல்லியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.
மத்திய பட்ஜெட்டில் தங்க நகைகளுக்கு ஒரு சதவீத கலால் வரியை ரத்து செய்யக் கோரி நகைக் கடை உரிமையாளர்கள் நாடு முழுவதும் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 15-வது நாளாக நேற்றும் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் சுமார் 2 லட்சம் கடைகள் மூடப்பட்டிருந்தன. தமிழகத்தில் சுமார் 35 ஆயிரம் கடைகள் மூடப்பட்டிருந்தன. தியாகராயர் நகரில் 20-க்கும் மேற்பட்ட நகைக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. புதுச்சேரியில் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளதால் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லியில் நகைக் கடை உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர்.
இது தொடர்பாக சென்னை தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறும்போது, ‘‘தங்க நகைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஒரு சதவீத கலால் வரியை நீக்கக் கோரி மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். டெல்லியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்’’ என்றார்.