

நாட்டின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் காலமானார். அவருக்கு வயது 98. அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் மங்களூருவில் 1923-ம் ஆண்டு ஏப்ரல் 5-ம் தேதி பிறந்தவர் சாரதா மேனன்.நீதிபதியாக இருந்த இவரது தந்தைசென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், பள்ளிக் கல்வியை சென்னையில் முடித்தசாரதா, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தார். பின்னர் பெங்களூருவில்உள்ள தேசிய மனநல, நரம்பியல்கல்வி மையத்தில் பயிற்சி பெற்றார். இதையடுத்து, நாட்டின் முதல்மனநல மருத்துவர் என்ற பெருமை பெற்றார்.
கடந்த 1984-ம் ஆண்டு மற்றொரு மனநல மருத்துவர் ஆர்.தாராவுடன் இணைந்து மனநலம்பாதித்தவர்களின் மேம்பாட்டுக்காக ஸ்கார்ப் (SCARF) எனும் நிறுவனத்தை தொடங்கினார்.
இவரது சேவையை பாராட்டும் வகையில் 1992-ம் ஆண்டு மத்திய அரசு இவருக்கு ‘பத்ம பூஷண்’ விருது வழங்கி கவுரவித்தது. சிறந்தமருத்துவருக்கான விருது, அவ்வையார் விருது உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.
தேசிய மனநல கல்வி மையத்தின் தலைவராக நீண்ட காலம் பணிபுரிந்தார். கீழ்ப்பாக்கம் மனநலமருத்துவமனையின் முதல் பெண்கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், வயது மூப்பு காரணமாக சாரதா மேனன் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றன. முன்னதாக, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘மன நோயாளிகளின் சிகிச்சையிலும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதிலும் தனி முத்திரை படைத்த சாரதா மேனன் மறைவு,மருத்துவத் துறைக்குப் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் உறவினர்களுக்கும், மருத்துவத் துறையினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
மநீம தலைவர் கமல்ஹாசன், ‘மன நோயாளிகளைப் பேணவும், மறுவாழ்வு அளிக்கவும் தன்மொத்த வாழ்வையும், அர்ப்பணித்த சாரதா மேனனுக்கு அஞ்சலி’ என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவர் சாரதாவின் மாணவியும் தற்கொலை தடுப்பு அமைப்பான ‘ஸ்நேகா’ நிறுவனருமான லட்சுமி விஜயகுமார் விடுத்துள்ள செய்தியில், ‘மனநல மருத்துவத் துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்க மருத்துவர் சாரதா முக்கியகாரணம். அவர் சிறந்த ஆசிரியராகவிளங்கினார். புதுப்புது விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தார்’ என்று தெரிவித்துள்ளார்.