

`உலக வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்க்கும் கட்சிக்கு, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆதரவு அளிப்போம்’ என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் தெரிவித்தார்.
உலக வர்த்தக ஒப்பந்தத்தின் கேடுகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கடந்த 1-ம் தேதி சென்னையில் இரு சக்கர வாகனப் பிரச்சாரத்தை வெள்ளையன் தொடங்கினார். 8-வது நாளான நேற்று பாளையங்கோட்டை ஜவஹர் திடலுக்கு வந்த இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
வெள்ளையன் பேசும்போது, “வணிகர்களின் வாழ்வுரிமையான சில்லறை வணிகத்தை சீரழித்து, அந்நியர் வணிகத்தை இந்தியாவில் வலுப்படுத்துவதுதான் உலக வர்த்தக ஒப்பந்தத்தின் பிரதான நோக்கம் என்பது எங்களது குற்றச்சாட்டு. தொடர்ந்து வந்த அரசுகளின் அந்நிய முதலீட்டு கொள்கைகள் அந்த குற்றச்சாட்டை உறுதி செய்தன. நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிக்கப்பட்டுள்ளன. பிஎஸ்என்எல் மிகவும் நலிந்துவிட்டது.
தேர்தல்களில் இவர்களுக் குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று நாம் அடிமை சாசனம் எதுவும் எழுதி கொடுக்கவில்லை. உலக வர்த்தக ஒப்பந்தத்துக்கு துணைபோகமாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாக உறுதி அளிப்போருக்கு தேர்தலில் ஆதரவு தெரிவிக்கலாம்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
உலக வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்க்கும் கட்சிக்கு எங்கள் ஆதரவு இருக்கும். எந்த கட்சியும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்காவிட்டால், தேர்தலை புறக்கணிப்பது குறித்து பேரவை கூட்டத்தில் முடிவு செய்வோம். சில்லறை வணிகர்களை வணிகத்திலிருந்து வெளியேற்றிவிட்டு பெரும் நிறுவனங்களுக்கு சாதகமாக தமிழக அரசு இ-சி-டாக்ஸ் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இத் திட்டத்தை கைவிட வேண்டும்’ என்றார் அவர்.