மருத்துவர் ஆலோசனைப்படியே படப்பிடிப்புக்கு சென்றார் கமல்: சுகாதாரத் துறை செயலர் விளக்கம்

மருத்துவர் ஆலோசனைப்படியே படப்பிடிப்புக்கு சென்றார் கமல்: சுகாதாரத் துறை செயலர் விளக்கம்
Updated on
1 min read

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 14 நாட்கள் தனிமைக்கு பிறகு, மருத்துவரின் ஆலோசனைப்படியே படப்பிடிப்புக்கு சென்றதாக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கிருந்து சென்னை திரும்பிய அவருக்கு கடந்த மாதம் 22-ம் தேதி கரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு, அவர் கடந்த 4-ம் தேதி வீடு திரும்பினார். வீடு திரும்பிய உடனே, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் இதுபற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதில் அளித்த அவர், கமல்ஹாசனிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்படும் என்று கூறியதாக செய்தி வெளியானது.

ஆனால், இதை ஜெ.ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:

இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு செய்திகள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன் 2 தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டதால், அவருக்கு கரோனா தொற்றின் தாக்கம் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. அவர் 14 நாட்கள் தனிமைக்கு பிறகு, மருத்துவரின் ஆலோசனைப்படியே படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். அதனால், அதுதொடர்பாக அவரிடம் எந்த விளக்கமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in