

சசிகலா அதிமுகவுக்கு மீண்டும் வருவது நடக்காத காரியம் என்று கடம்பூர் ராஜு எம்எல்ஏ கூறினார்.
கோவில்பட்டியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இனிமேல் அதிமுகவுக்கு இரட்டை தலைமை தான் என்ற நிலைப்பாட்டுடன் அதற்கான சட்டத்திருத்தம் செயற்குழுவில் செய்யப்பட்டுள்ளது. இதற்கு, அனைத்து மாவட்டச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்களின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. அடுத்து நடைபெற உள்ள பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறும் நேரத்தில் இரட்டை தலைமையோடு அதிமுகவெற்றி நடைபோடும்.
சசிகலாவை கட்சியில் சேர்ப்பீர்களா என்ற கேள்விக்கே வழியில்லை. அவர்கள் தனியாக இயக்கம் கண்டுவிட்டனர். அதிமுகவில் இருந்து பிரிந்து ஒரு கட்சி தொடங்கிய பின்னர் அவர்கள் மீண்டும் வருவது என்பது நடக்காதகாரியம். அதுவும் நேற்றைய தினம் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்தபோது, அருவருக்கத்தக்க அளவுக்கு நடந்துகொண்டனர். அதிமுகவுடன் ஒட்டும்கிடையாது உறவும் கிடையாது எனஅவர்களாக ஒரு நிலைபாட்டை எடுத்துவிட்டனர். அதிமுக நிறுவனதலைவர் எம்.ஜி.ஆர் மறைவுக்குபின்னர் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. ஜெயலலிதா தான் எங்களுக்கு நிரந்தர பொதுச்செயலாளர் . அந்த இடத்தை யாராலும் முடியாது. அதனால் தான் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்பாளர், இணைஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு கட்சியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்டவர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஆனால், கட்சியில் உறுப்பினராக இல்லாதவர் மனுத்தாக்கல் செய்ய, விண்ணப்பம் எப்படி கொடுக்க முடியும்.அதனால் அது அனுமதிக்கப்படவில்லை. ஜனநாயக முறைப்படி தான் தேர்தல் நடைபெறுகிறது, என்றார்.