தேனியில் பெய்த திடீர் கனமழையால் கரைகளைக் கடந்து ஓடும் ஆறுகள்: வயல்களில் புகுந்த வெள்ளநீர்; பயிர்கள் சேதம்

தேனியில் பெய்த திடீர் கனமழையால் கரைகளைக் கடந்து ஓடும் ஆறுகள்: வயல்களில் புகுந்த வெள்ளநீர்; பயிர்கள் சேதம்
Updated on
1 min read

தேனி மாவட்டத்தில் இன்று பெய்த திடீர் கனமழையால் பல ஆறுகளிலும் நீர் கரையைக் கடந்து வயல்களில் புகுந்தன. இதனால் வாழை, தென்னை மற்றும் நெல் வயல்கள் வெகுவாய் சேதமடைந்தன. வைகை அணையில் அதிக நீர்வரத்து ஏற்பட்டதால் விநாடிக்கு 11ஆயிரம் கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது.

தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தொடர் மழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாவட்டத்தில் உள்ள வைகை,சோத்துப்பாறை, மஞ்சளாறு உள்ளிட்ட பல்வேறு அணைகளும் நிரம்பின.

இந்நிலையில் மழை முற்றிலும் குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்தது. எனவே கனமழையினால் ஏற்பட்டிருந்த குளிர்பருவநிலை லேசாய் மாறத் தொடங்கியது.

இந்நிலையில் இன்று மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. ஆண்டிபட்டியில் 64மிமீ, போடியில் 98மிமீ, கூடலூரில் 61.7மிமீ, உத்தமபாளையத்தில் 93மிமீ, வீரபாண்டியில் 128மிமீ, மழைப் பொழிவு இருந்தது.

இதனால் மீண்டும் ஆறுகளில் நீர்பெருக்கு ஏற்பட்டது. மூலவைகை, சுருளியாறு, வராகநதி, மஞ்சளாறு உள்ளிட்டவற்றில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரைகளைக் கடந்து வயல்களில் தண்ணீர் புகுந்தன.

குறிப்பாக முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்ட அதீத நீர்ப்பெருக்கால் சின்னமனூர், வீரபாண்டி, சீலையம்பட்டி, போடேந்திரபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கரைகளைக் கடந்து வெள்ளநீர் வயல்களில் புகுந்தது. உப்பார்பட்டி பகுதியில் கரையோரங்களில் வளர்ந்திருந்த தென்னைமரங்கள் வேரோடு சாய்ந்தன.

வீரபாண்டி கண்ணீஸ்வரமுடையார் கோயில் அருகே நேர்த்திக்கடன் செலுத்தும் பகுதி முழுவதும் வெள்ளநீர் புகுந்தது. இதனால் பக்தர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

வைகையின் துணை ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தினால் வைகை அணைக்கு நீர்வரத்து வெகுவாய் உயர்ந்தது. இதனால் நீர்மட்டம் 70.2அடியாக(மொத்த உயரம் 71) உள்ளது.

எனவே இன்று அதிகாலை 3 மணிக்கு நீர்வெளியேற்றம் 9ஆயிரத்து 839கனஅடியில் இருந்து 11ஆயிரத்து 559கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் வைகையில் வெள்ளம் ஏற்பட்டு நீர் கரைபுரண்டு ஓடியது. காலை 5 மணிக்கு 8ஆயிரத்து 681கனஅடியாகவும், 9 மணிக்கு 9ஆயிரத்து 839கனஅடியாகவும், 10 மணிக்கு 11ஆயிரத்து 35கனஅடியாகவும் நீர்வெளியேற்றப்பட்டது. நீர்வரத்திற்கு ஏற்ப தண்ணீர் வெவ்வெறு அளவுகளில் தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதிகளவு நீர் வெளியேற்றப்படுவதால் வைகை கரையோரம் வசிப்பவர்களுக்கு தொடர் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in