Published : 17 Mar 2016 06:46 PM
Last Updated : 17 Mar 2016 06:46 PM

புகையிலை நிறுவனங்களுக்கு ஆதரவான பரிந்துரையை மத்திய அரசு ஏற்கக்கூடாது: அன்புமணி

புகையிலை நிறுவனங்களுக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் சார்பு சட்டங்களுக்கான மக்களவைக் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கக்கூடாது என்று பாமக இளைஞர் அணித் தலைவரும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளருமான அன்புமணி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது வெளியிடப்படும் எச்சரிக்கைப் படங்களின் அளவை 40 விழுக்காட்டிலிருந்து 85% ஆக அதிகரிக்கும் திட்டம் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. இந்த நிலையில் எச்சரிக்கைப் படங்கள் 50% அளவுக்குத் தான் இருக்க வேண்டும் என்று சார்பு சட்டங்களுக்கான மக்களவைக்குழு பரிந்துரைத்திருக்கிறது. புகையிலை நிறுவனங்களுக்கு சாதகமான, மக்களுக்கு எதிரான இந்த அர்த்தமற்ற பரிந்துரை கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

புகையிலையைக் கொண்டு தயாரிக்கப்படும் சிகரெட், பீடி உள்ளிட்ட பொருட்கள் புகைப்பவர்களை மட்டுமின்றி, புகைப்பவர்கள் விடும் புகையை சுவாசிப்பவர்களையும் பாதிக்கிறது. அதுமட்டுமின்றி, ஓர் அறையில் ஒருவர் புகை பிடித்திருந்தால் அந்த அறையில் உள்ள பொருட்களில் படிந்திருக்கும் நச்சுப் புகை அந்த அறைக்கு பின்னர் வந்து தங்குபவர்களையும் பாதிக்கும் என்று உலக நலவாழ்வு மையம் கண்டறிந்திருக்கிறது.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் மத்திய சுகாதாரம் மற்றும் நலவாழ்வுத்துறை அமைச்சராக இருந்த போது பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கும் சட்டத்தையும், புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது அவற்றின் தீமைகளை விளக்கும் எச்சரிக்கை படங்களை 40% அளவில் அச்சிடும் சட்டத்தையும் கொண்டு வந்தேன். இந்த அளவை படிப்படியாக அதிகரிக்க வேண்டும் என்று அப்போதே வகுக்கப்பட்ட விதியின்படி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதியிருந்து எச்சரிக்கைப் படங்களின் அளவு 85% ஆக அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், புகையிலை நிறுவன அதிபர்களையும், அவர்களின் ஆதரவாளர்களையும் உறுப்பினர்களாகக் கொண்ட சார்பு சட்டங்களுக்கான மக்களவைக் குழு இத்திட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்த பரிந்துரையை ஏற்று எச்சரிக்கை படங்களை பெரிதாக்கும் திட்டத்தை மத்திய அரசு ஒத்தி வைத்தது.

அதைத்தொடர்ந்து பாமக கொடுத்த அழுத்தம் காரணமாக எச்சரிக்கைப் படங்களை 85% அளவில் வெளியிடும் திட்டத்தை வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைப்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு இன்னும் இரு வாரங்கள் கூட இல்லாத நிலையில், அதற்கு முட்டுக்கட்டைப் போடும் வகையில் தான் எச்சரிக்கைப் படங்களின் அளவை குறைக்கும் பரிந்துரையை சார்பு சட்டங்களுக்கான மக்களவைக்குழு பரிந்துரைத்திருக்கிறது.

புகை பிடிப்பதால் புற்றுநோய் ஏற்படும் என்று இந்திய ஆய்வில் உறுதி செய்யப்படவில்லை என்ற அபத்தமான காரணத்தைக் கூறி பெரிய அளவில் எச்சரிக்கைப் படங்களை வெளியிடும் திட்டத்தைக் கடந்த ஆண்டு நிறுத்தி வைத்த திலிப் குமார் காந்தி தான் இப்போதும் இப்பரிந்துரையை வழங்கியிருக்கிறார். இதற்காக திலிப் குமார் காந்தி தலைமையிலான குழு கூறியுள்ள காரணங்கள் எதுவுமே ஏற்றுக்கொள்ளக் கூடியவை அல்ல.

''சிகரெட் பெட்டியின் இரு புறமும் 50% அளவுக்கு மட்டும் தான் எச்சரிக்கைப் படங்கள் இடம் பெற வேண்டும். பீடி மற்றும் பிற புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது ஒருபுறம் மட்டும் 50% அளவுக்கு எச்சரிக்கைப் படம் வெளியிட்டால் போதுமானது. இருபுறமும் 85% அளவுக்கு எச்சரிக்கைப் படங்கள் வெளியிடப்பட்டால் புகையிலைப் பொருட்களின் வணிகப் பெயரையும், சின்னத்தையும் அச்சிட இடம் இருக்காது'' என்று மக்களவைக் குழுவின் பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

புகை பிடிப்பதால் மட்டும் இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கும் மேல் உயிரிழக்கின்றனர். அவர்களையும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் பற்றி கவலைப்படாத குழுத் தலைவருக்கு புகையிலை நிறுவனங்களின் வணிகப் பெயரும், சின்னமும் பெரிய அளவில் இடம் பெறாது என்பது தான் கவலையாக இருக்கிறது. இதிலிருந்தே இவரும், இவர் தலைமையிலான குழு உறுப்பினர்களும் உழைப்பது மக்களுக்காகவா? புகையிலை நிறுவனங்களுக்காகவா? என்பதை தெளிவாக அறியலாம்.

சார்பு சட்டங்களுக்கான மக்களவைக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் புகையிலை லாபிக்கு ஆதரவாக இருப்பதற்கு இன்னும் பல உதாரணங்களும் உள்ளன. ''85% பரப்பளவில் எச்சரிக்கைப் படங்களை வெளியிடுவது புகையிலை நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடுமையான தண்டனையாக இருக்கும். இத்தகைய எச்சரிக்கைப் படங்கள் வெளியிடப்பட்டால் கள்ள சிகரெட்டுகள் மற்றும் பீடிகள் சந்தைக்கு வரும். அதுமட்டுமின்றி, எச்சரிக்கைப் படங்களால் புகையிலைப் பொருட்களின் விற்பனை குறைந்தால் அது புகையிலை விவசாயிகளையும், பீடி, சிகரெட் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும்'' என்றும் திலிப்குமார் காந்தி தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எச்சரிக்கைப் படங்களை பெரிய அளவில் வெளியிடுவதால் புகையிலைப் பொருட்களின் விற்பனை பாதிக்கப்படுவது குறித்து புகையிலை நிறுவனங்களைவிட மக்களவைக் குழு உறுப்பினர்கள் தான் அதிகமாக கவலைப்படுகின்றனர். புகையிலைத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றால், அவர்களுக்கு மாற்று வாழ்வாதாரங்களை ஏற்படுத்தித் தர வேண்டுமே தவிர அதற்காக மக்களை கொல்லும் புகையிலைப் பொருட்களுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுப்பது கண்டிக்கத்தக்கது.

முழுக்க முழுக்க புகையிலை நிறுவனங்களுக்கு ஆதரவாக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் சார்பு சட்டங்களுக்கான மக்களவைக் குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கக்கூடாது.

புகையிலைப் பொருட்களின் உறைகள் மீது 85% அளவில் எச்சரிக்கைப் படங்களை வெளியிடும் திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதை அரசு உறுதி செய்ய வேண்டும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x