Published : 16 Mar 2016 05:06 PM
Last Updated : 16 Mar 2016 05:06 PM

தஞ்சையை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்திலும் நெருக்கடி: விவசாயிகளை அச்சுறுத்தும் கூட்டுறவுத் துறையினர்- நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்புவதாக குற்றச்சாட்டு

தஞ்சையை தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்திலும் நெருக்கடி கொடுக்கும் விதமாக நீதிமன்றம் மூலம் சம்மன் அனுப்பி விவசாயிகளை கூட்டுறவுத் துறை அச்சுறுத்தி வருகிறது என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தஞ்சை விவசாயி மீது தாக்குதல், அரியலூர் விவசாயி தற்கொலை போன்ற நிகழ்வுகளுக்கு நியாயம் கேட்டு தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தினோம்.

அப்போது, ‘தஞ்சை மாவட்டத்தில் எவ்வித விவசாய கடன் வசூலிப்பு பணியும் நடக்காது. தேர்தல் முடிந்து புதிய அரசு தனது கொள்கை முடிவை அறிவிக்கும் வரை இந்த நிலை தொடரும். இதுகுறித்து தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்படும்’ என தஞ்சை ஆட்சியர் உறுதியளித்தார்.

ஆனால், திருவாரூர் மாவட்டத்தில் தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளுக்கு, நீதிமன்றம் மூலம் நோட்டீஸ் அனுப்பி கூட்டுறவுத் துறை அச்சுறுத்தி வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் இதுபோன்ற நடவடிக்கை தொடர்ந்தால் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம். கடன் வசூலிக்க வரும் அதிகாரிகளையும் வாகனங்களையும் சிறைபிடிப் போம். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் ஆர்ப்பாட்டம்…

அரியலூரில் தற்கொலை செய்துகொண்ட விவசாயி அழகர் குடும்பத்தினருக்கு நேற்று ஆறுதல் தெரிவித்த அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “வங்கிகள், நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கண்டித்து சென்னையில் ரிசர்வ் வங்கிக் கிளை அருகில் வரும் 22-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x