Published : 06 Dec 2021 02:18 PM
Last Updated : 06 Dec 2021 02:18 PM

பொங்கலுக்குக் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 வழங்க வேண்டும்: தேமுதிக மா.செ. கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து இன்று தேமுதிக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட அறிக்கை:

"தேமுதிகவின் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் விஜயகாந்த் ஆணைக்கிணங்க கட்சிப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் 9 கோரிக்கைகள் அடங்கிய தீர்மானம் நிறைவேற்றி, கட்சியின் வளர்ச்சி குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:

தீர்மானம்: 1

2021-ம் ஆண்டில் கொடிய நோயான கரோனா தாக்கத்தினாலும், உடல்நலக் குறைவினாலும் இயற்கை எய்திய தேமுதிக மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் சிவமுத்துக்குமார், தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை பொருளாளர் முஜிபூர் ரஹ்மான், தலைமைக் கழகப் பேச்சாளர் தீப்பொறி செல்வதாசன், மேற்கு சென்னை மாவட்டத் தொண்டர் அணிச் செயலாளர் செல்வமணி, இதுபோன்று தமிழகம் முழுவதும் இயற்கை எய்திய தேமுதிக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் என அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

தீர்மானம்: 2
வடகிழக்குப் பருவமழை காரணமாக டெல்டா மாவட்டத்தில் விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் வெள்ளத்தில் சேதம் ஏற்பட்டு, விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. ஆகையால் மாநில அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 நஷ்ட ஈடாக வழங்க வேண்டும்.

தீர்மானம்: 3
தைப்பொங்கல் தமிழகம் முழுவதும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். தமிழக அரசு ஆண்டுதோறும் பரிசுப் பொருட்களும், பணமும் வாடிக்கையாக வழங்கும், அதேபோல் இந்த ஆண்டும் தைப்பொங்கலுக்குக் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 வழங்க வேண்டும்.

தீர்மானம்: 4
தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டே இருக்கிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது பள்ளி மாணவிகள். கல்வி கற்கும் குருவே இச்சம்பவத்தில் ஈடுபடுவது மிகப்பெரிய குற்றம், இதில் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கினால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தவிர்க்கலாம்.

தீர்மானம்: 5
2019-ம் ஆண்டு முதல் தொடர்ந்து உலகம் முழுவதும் கரோனா தாக்கம் ஏற்பட்டுப் பல தொழில்கள் அதிகம் நஷ்டம் ஏற்பட்டு, பல இளைஞர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளார்கள். இந்தக் கரோனாவால் உலகம் முழுவதும் பல லட்சம் உயிர்கள் மாண்டு இருக்கிறார்கள். இப்பொழுது ஒமைக்ரான் புதியவகை உருமாற்ற கரோனா பல நாடுகளில் தொற்று ஏற்பட்டு, அதிகமாகப் பரவி வருகிறது என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

எனவே ஒமைக்ரான் கரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளைப் பரிசோதனை செய்தால் மட்டும் போதாது, அவர்களை 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டால் மட்டுமே தொற்று பரவாமல் கட்டுப்படுத்த முடியும். மேலும் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பது, கரோனா தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொள்வது, கைகளைச் சோப்பு போட்டுச் சுத்தம் செய்வது போன்றவற்றை மக்களுக்குத் தெளிவாக வலியுறுத்தி, அதைப் பின்பற்றுகிற முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, கடுமையான பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும்.

தீர்மானம்: 6
முல்லைப் பெரியாறு அணை மட்டம் 152 அடி உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், கேரள அரசு தொடர்ந்து பொய்ச் செய்தியாக அணை வலுவிழந்துள்ளது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறது. தமிழக அரசு முல்லைப் பெரியாறு பிரச்சினையை கேரள அரசுக்கு விட்டுக்கொடுக்காமல் 152 அடி உயர்த்துவதற்கு வழிவகைகள் செய்ய வேண்டும்.

தீர்மானம்: 7

பெட்ரோல், டீசல் விலை என்பது கச்சா எண்ணெய் விலையால் நிர்ணயம் செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் உடனே பெட்ரோல், டீசல் உயர்கிறது. இந்த விலை ஏற்றத்தால் கட்டுமானப் பொருட்கள் சிமெண்ட், ஜல்லி, மணல், கம்பி, காய்கறிகள் போன்ற அனைத்து விலைகளும் கடுமையாக உயர்கின்றன. தற்போது கச்சா எண்ணெய் வீழ்ச்சி அடைந்துகொண்டு இருக்கின்ற நிலையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து, அத்தியாவசியப் பொருட்கள், காய்கறிகள் விலையைக் குறைக்க அரசாங்கம் கண்காணித்து மக்களைக் கடுமையான பாதிப்பில் இருந்து காப்பாற்றிட மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தீர்மானம்: 8
பருவமழை காரணமாக வெள்ளப்பெருக்கு, தண்ணீர் தேங்குதல் ஏற்படுகிறது. வீணாகக் கடலில் கலக்கும் நீரைத் தேக்கிவைத்துக் கொள்ளவும், மக்கள் வசிக்கும் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்கவும், இதுவரை எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை . பிற்காலத்தில் இதுமாதிரி மழைக் காலங்களில் ஏற்படும் இன்னல்களைத் தவிர்க்கின்ற வகையில் தடுப்பணைகள் உருவாக்கி, நீர் வீணாகாமல் தடுத்திடவும், நீர்நிலைகள், குளம், குட்டை, ஏறி, ஆறு போன்றவற்றைத் தூர் வாரி, தண்ணீரைப் பாதுகாக்க அதற்குண்டான திட்டங்களைச் செயல்படுத்தவும்.

தீர்மானம்: 9
நடைபெற இருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்க வேண்டும். கடந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் மிக மோசமாகப் பணப் பட்டுவாடா செய்தார்கள். அதுபோன்று இந்தத் தேர்தலில் நடக்கா வண்ணம் மாநிலத் தேர்தல் ஆணையம் மிக கவனமுடன் உரிய பாதுகாப்போடு நடத்த வேண்டும் என ஒன்பது தீர்மானங்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் முன்னிலையில் நிறைவேற்றப்பட்டன."

இவ்வாறு தேமுதிக தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x