Published : 06 Dec 2021 12:06 PM
Last Updated : 06 Dec 2021 12:06 PM

முப்படை வீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம்; பெருமளவில் கொடி நாள் நிதி வழங்குவோம்: முதல்வர் ஸ்டாலின்

நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க இன்னுயிரையும் பொருட்படுத்தாது பணியாற்றும் முப்படை வீரர்களின் தியாகத்தைப் போற்றுவோம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொடி தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

"பெற்ற தாயையும், பெற்றெடுத்த செல்வங்களையும், உற்ற மனைவியையும், உறவினர்களையும் பிரிந்து, பிறந்த நாட்டின் பெருமை காத்திடும் முப்படை வீரர்களின் தியாகத்தை நினைவில் நிறுத்தும் திருநாள் இக்கொடி நாளாகும்.
நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க, கொட்டும் மழையிலும், குளிரிலும் நின்று தமது இன்னுயிரையும் பொருட்படுத்தாது இந்தியத் திருநாட்டின் புகழைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்தைப் போற்றுவதோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு நல்வாழ்வு அமைத்துத் தருதலும் நமது கடமையன்றோ!

முப்படை வீரர்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளிவீசக் கொடி நாளின் கொடி விற்பனைக்கு மனமுவந்து பெருமளவில் நிதி அளிப்போம். அந்த நிதி அவர்களின் குடும்பத்தினருக்குப் பல்வேறு வகையிலும் பயன் தரும்.

பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காக்கும் தன்னலம் கருதாத அந்தத் தியாக வீரர்களுக்கான கொடி நாள் நிதிக்குத் தொகை அளிப்பதில் தமிழ்நாடு எப்போதும் தனி இடத்தைப் பெற்று வருகிறது. எனவே, இவ்வாண்டும் பெரும் அளவில் நிதி வழங்கி முன்னாள் படைவீரர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் நம் வணக்கத்தையும் நன்றியையும் காணிக்கை ஆக்குவோம்."

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x