

ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில், பொருளாதாரத் துறை தலைவராக பணிபுரியும் பேரா. நா.மணி, இந்திய சமூக அறிவியல் கழகத்தின் (ICSSR) நிதி உதவியோடு, "மானாவாரி நிலங்களை மேம்படுத்தி, வருவாய், வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்து, அப்பகுதியில் வாழும் மக்களின் குடிப் பெயர்ச்சியை தடுப்பதற்கான வழிமுறைகள்" என்ற தலைப்பில் ஆய்வு செய்து வருகிறார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 28 பழங்குடி கிராமங்களில், 956 பேரிடம் கள ஆய்வு செய்து, முடிவுகளை தொகுத்து இந்திய அரசுக்கு சமர்ப்பிக்க இருக்கிறார். அதன் மூன்று முக்கிய அம்சங்கள் ‘இந்து தமிழ்' நாளிதழ் வழியாக வழங்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தின் வனப் பகுதி 2.27 லட்சம் ஹெக்டேர். இப் பகுதிக்குள் 115 பழங்குடி கிராமங்கள் உள்ளன. சோளகர், ஊராளி, இருளர், மலையாளிகள் முக்கியப் பழங்குடி பிரிவினர். இதில், மலையாளிகள் இம்மாவட்டத்தில் பழங்குடிகளாக இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை. பழங்குடிகளின் அனுபவத்தில் இருந்தநிலங்கள், பிரிட்டிஷாரால் வன நிலம்,வருவாய் பட்டா நிலம், வருவாய் புறம்போக்கு என்று வரையறை செய்யப்பட்டது. பட்டா நிலமுடைய பழங்குடிகள் 21.3% (204 பேர்). வன நிலத்தில் பயிரிட்டு வருபவர்கள் 22.8% (218 பேர்).வருவாய் புறம்போக்கு நிலங்களில் சாகுபடி செய்பவர்கள் 22.5% (214 பேர்). நிலம் இல்லாத பழங்குடிகள் 31% (296 பேர்). பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் கொண்டு வந்த பட்டியலின பழங் குடியினர் நிபந்தனை பட்டா நிலம் வைத்திருப்பவர்கள் 2.5% (24பேர்).
சாகுபடி நிலங்களின் வகைகள்
பட்டா நிலம் என்பது அனைவருக்கும் தெரிந்த நிலப் பகுதி. வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை ஆண்டு ஒன்றுக்கு ஒரு சிறிய குத்தகை தொகையை கொடுத்து விட்டு பழங்குடி மக்கள் பயன்படுத்தி வரும் நிலத்தை 'வன செட்டில்மென்ட் நிலம்' என்று கூறுகின்றனர். அரசு ஆவணங்களில் வருவாய் புறம்போக்கு என்ற பெயரில் உள்ள நிலத்தை, பழங்குடிகள் 'சிவஜமீன்' என்று அழைக்கின்றனர். இறைவன் கொடுத்த நிலம் என்பது அதன் பொருள். எஸ்சி/ எஸ்டி நிபந்தனை பட்டா நிலம் என்பது பிரிட்டிஷார் நிலமற்ற கூலி விவசாயிகளுக்கு வழங்கிய நிலம். இதனை இப்பிரிவு மக்கள் தவிர வேறு யாரும் வாங்கக் கூடாது.
நிலமற்ற பழங்குடிகளின் உண்மை நிலை
நமது ஆய்வுக்கு உட்பட்ட கிராமங்களில், நிலமில்லாத பழங்குடிகள் 296 பேரில், வஞ்சனையில் நிலத்தை இழந்தவர்கள் 4% (38 பேர்). கடன் தொல்லை தாங்க முடியாமல் நிலத்தை விற்றவர்கள் 4% (38 பேர்). மீட்க முடியாத கடனில், நிலத்தை அடமானம் வைத்திருப்பவர்கள் 8% (76 பேர்).
நிலத்தை இழந்தவர்கள் கதை என்ன?
சிவஜமீன் என்று பழங்குடிகள் கூறும் வருவாய் புறம்போக்கு நிலத்தில், அவர்கள் காலங்காலமாக சாகுபடி செய்து வருகின்றனர். இது அரசுப் புறம்போக்கு என்ற உணர்வே பழங்குடிகளுக்கு இருந்தது இல்லை. பழங்குடிகளுக்கு, கந்து வட்டிக்கு பணம் கொடுக்க வந்தவர்களின் கண்களில் இந்த புறம்போக்கு நிலங்கள் உறுத்தியது. நன்கு விளையும் மண்ணைக் கண்டால் அதனை வருவாய் துறையினரின் ஒத்துழைப்போடு தங்கள்நிலமாக மாற்றிக் கொண்டனர்.
பழங்குடிகள் உழுது வந்த நிலங்கள் திடீரென வேறு யாருக்கோ சொந்தம் என்று கூறப்பட்டு, தங்கள் பூர்விக பந்தம் அறுத்து எறியப்பட்டு நிலத்தில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். நிலத்தை எவ்வாறு இழந்தார்கள்? அந்தத் தருணத்தில் அவர்களது நிலை எவ்வாறாக இருந்தது? பின்னர் அவர்கள் என்ன ஆனார்கள் என்பதை சோளகர் தொட்டி நாவலில் மிக நேர்த்தியாக விவரித்து இருப்பார் நாவலாசிரியர் ச.பாலமுருகன்.
நன்மையும் தீமையும்
எழுபதுகளில் இந்த நில மோசடி வேகமாக அதிகரிக்கத் தொடங்கியது. அதேநேரம் 1989-ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அன்றைய நீலகிரி மாவட்ட ஆட்சியர், "நீலகிரி மாவட்டத்தில், புறம்போக்கு நிலங்களில் நிலச் சரிவுகளில் சாகுபடி செய்து வருவோருக்கு நில உரிமை அளிப்பதை தடை செய்ய வேண்டும்" என்ற பரிந்துரையை அரசுக்கு முன்வைத்தார்.
அதனை ஏற்றுக் கொண்ட தமிழ்நாடு அரசு, மாநிலம் முழுவதும் புறம்போக்கு நிலங்களில் சாகுபடி செய்து வருபவர் களுக்கு பட்டா கொடுப்பதை நிறுத்தி வைத்தது. இதன் விளைவாக பழங் குடிகள் நிலத்தை கபலீகரம் செய்து வந்தது தற்காலிகமாக தடுக்கப்பட்டது.
அதேநேரம், என்பதுகள் தொடங்கி இன்று வரை விவசாயிகளுக்கு அளித்து வரும் எந்தவொரு சலுகையையும் சிவஜமீன் நிலத்தில் சாகுபடி செய்துவரும் பழங்குடிகளால் பெற முடியவில்லை. நூற்றாண்டு காலம் தங்கள் அனுபவப் பாத்தியம் உள்ள நிலங்கள் அவை. காலங்காலமாக சாகுபடி செய்கின்றனர். அரசு பட்டா செய்து கொடுக்காததால் விவசாயி என்ற அந்தஸ்து பெற முடியவில்லை.
இதனால் மத்திய அரசு வழங்கி வரும் வருட மானியம் ரூ.6,000, மத்திய, மாநில அரசுகளின் பயிர் கடன், உர மானியம், பயிர் காப்பீடு, குறைந்த வட்டியில் கூட்டுறவு கடன்கள், பொதுத்துறை வங்கிக் கடன்கள், கடன் தள்ளுபடி, நகைக் கடன் என எதனையும் இவர்களால் இன்றுவரை அனுபவிக்க முடியவில்லை. இதனால் ஒவ்வொருபழங்குடி விவசாயிக்கும் ஆயிரக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது, வறுமையில் இருந்து மீளாமல் இருக்கவும், மறுபுறம் மீண்டும் மீண்டும் கடன் வலையில் சிக்கவும் காரணமாகிறது.
வன நிலம் கூட சொந்தமாகிவிட்ட சூழல்
2006-ம் ஆண்டு வன உரிமைச் சட்டம் அமலுக்கு வந்தாலும், தமிழ் நாட்டில் பதினைந்து ஆண்டுகள் கழித்தே பயனளிக்க தொடங்கி உள்ளது. இதன் விளைவாக, குத்தகைக்கு உழுது வந்த வனத்துறைக்கு சொந்தமான நிலம் கூட அவர்களின் பட்டா நிலமாக மாறி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகளின் சலுகைகள் கிடைக்கத் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் 6,000/- ரூபாயும் தமிழ்நாடு அரசின் கடன் தள்ளுபடி திட்டங்களும் பலனளிக்க தொடங்கி உள்ளன. ஆனால் இதுவும்கூட இன்னும் முழுமை அடையவில்லை. தொடக்க நிலையிலேயே உள்ளது. காலம் தாழ்த்தியேனும் நிகழ்ந்து வரும். ஆரோக்கியமான மாற்றங்கள் இது. ஆனால் மாறாமல் இருப்பது தங்களின் சிவஜமீன் மீதான உரிமை மட்டுமே.
என்ன செய்ய வேண்டும் தமிழ்நாடு அரசு?
1989-ம் ஆண்டு, தமிழ் நாடு அரசு பிறப்பித்த நிலை ஆணை எண் 1168-ஐ ரத்து செய்ய வேண்டும். சிவஜமீன் என்ற பெயரில் பழங்குடிகள் பயன்படுத்தி வரும் வருவாய் புறம்போக்கு நிலங்களை அளவீடு செய்து அவரவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இதன் விளைவாக பழங்குடிகளின் கடன் பளு குறையும். வருவாய் அதிகரிக்கும். வேலை தேடி தொலைதூரம் செல்வது தவிர்க்கப்படும்.