Published : 06 Dec 2021 03:07 AM
Last Updated : 06 Dec 2021 03:07 AM

தேர்தல்களில் தொடர் தோல்விகளால் பின்னடைவு: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடத் தயங்கும் தேமுதிகவினர்

சென்னை

தேர்தல்களில் தேமுதிக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதால், விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சியினர் போட்டியிடத் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

நடிகர் விஜயகாந்த் 2006-ல்தேமுதிகவை தொடங்கினார். அந்தஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டாலும், விருத்தாசலத்தில் போட்டியிட்ட விஜயகாந்த் மட்டுமே வெற்றி பெற்றார்.

2011-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, ரிஷிவந்தியம் தொகுதியில் வெற்றி பெற்றார். 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக தலைமையில் மக்கள் நலக் கூட்டணி உருவாக்கப்பட்டு, உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த், அதிமுகவிடம் தோல்வியைச் சந்தித்தார்.

அடுத்தடுத்த தேர்தல்களில் தேமுதிக தோல்வியைத் தழுவியதால், 2009-ல் 10.3 சதவீதமாக இருந்த தேமுதிகவின் வாக்கு விகிதம் படிப்படியாகக் குறைந்து, தற்போது ஒரு சதவீதத்துக்கு கீழ் சென்றுவிட்டது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது. பின்னர், அமமுகவுடன் கூட்டணி அமைத்து, 60 இடங்களில் போட்டியிட்டது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனாலும், அந்த தேர்தலில் தேமுதிக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

அண்மையில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தேமுதிக, பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

அடுத்தடுத்த தேர்தல்களில் தேமுதிகவுக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலர்களில் பலர் திமுகவிலும், சிலர் அதிமுகவிலும் இணைந்தனர்.

இதற்கிடையே, தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட உள்ளது. இருப்பினும், அக்கட்சியினர் இத்தேர்தலில் போட்டியிட பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை.

இதுகுறித்து தேமுதிக மாவட்டச் செயலர்கள் சிலர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் பலமான கூட்டணிதான் ஆட்சியை அமைக்கிறது. தேமுதிக தலைவர் உடல்நிலை சரியாக இல்லாததால், முன்புபோல அவரால் தீவிர அரசியலில் ஈடுபடமுடியவில்லை. இதனால், தேர்தலை சந்திப்பதிலும், கூட்டணி வியூகம் அமைப்பதிலும் தேமுதிகவுக்கு சறுக்கல் ஏற்பட்டு வருகிறது.

முன்பெல்லாம், தேமுதிக சார்பில் போட்டியிட கடும் போட்டி இருக்கும். சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் தேமுதிக தோல்வியடைந்துள்ளதால், வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட கட்சியினர் தயக்கம் காட்டுகின்றனர். இந்த நிலையை மாற்றி, கட்சியைவளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம்’’என்றனர்.

வெற்றி-தோல்லி நோக்கமல்ல...

இது தொடர்பாக தேமுதிக மூத்தநிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விருப்பமுள்ளவர்களிடம் மட்டுமே மனுக்களைப் பெறலாம் என்று கட்சி அறிவித்துள்ளது.

தேமுதிகவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வது தொடர்பாக, சென்னையில் இன்று நடைபெறும் மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும். இதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

வரும் தேர்தலில் வெற்றி-தோல்வி என்பது தேமுதிகவுக்கு முக்கியம் அல்ல. கட்சியைவளர்ச்சிப் பாதைக்கு கொண்டுசென்று, வாக்கு சதவீதம் அதிகரிப்பதே நோக்கமாகும்’’ என்றனர்.

தேமுதிகவின் வாக்கு விகிதம் படிப்படியாகக் குறைந்து, தற்போது ஒரு சதவீதத்துக்கு கீழ் சென்றுவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x