

சென்னை கிண்டி அண்ணா சாலையில் தொழிற்பேட்டை பெட்ரோல் பங்க் அருகே உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் ஊழியர்கள் கடந்த 1-ம் தேதி பணம் நிரப்பினர். அப்போது ஏடிஎம் இயந்திரத்தில் ‘ஸ்கிம்மர் கருவி’ பொருத்தப்பட்டிருந்தது. ஏடிஎம் கார்டில் உள்ள தகவல்களை ரகசியமாக ஸ்கேன் செய்யும் கருவிதான் ‘ஸ்கிம்மர்’. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உடனடியாக வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கிண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து, ஸ்கிம்மர் பொருத்தியது யார் என்று கண்டுபிடிப்பதற்காக, ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அதிகாரிகள், போலீஸார் போட்டுப் பார்த்தனர். அப்போது, வெளிநாட்டு இளைஞர்கள் 2 பேர் வந்து ஸ்கிம்மர் கருவியை பொருத்துவது தெரிந்தது. ஸ்கிம்மர் கருவியை அகற்றாமல், அந்த ஏடிஎம் மையத்தை போலீஸார் ரகசியமாக கண்காணித்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அதே இளைஞர்கள் மீண்டும் ஏடிஎம் மையத்துக்கு வந்தனர். ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ஸ்கிம்மர் கருவியை எடுக்க முயன்றபோது, போலீஸார் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
அவர்கள் ருமேனியா நாட்டை சேர்ந்த ஜேம்ஸ், இர்மெய்ன்ட் என்பது விசாரணையில் தெரியவந்தது. சென்னையில் கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளனர் என்றும் தெரியவந்தது.