Published : 06 Dec 2021 03:07 AM
Last Updated : 06 Dec 2021 03:07 AM

பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை; போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு: குற்றத்துக்கு உதவியதாக காவலர், மருத்துவர் உட்பட 7 பேர் மீது புகார்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள பகுதியைசேர்ந்த 32 வயது பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர், அவருக்கு உதவியதாக 7 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “எனக்கு திருமணமாகி விவாகரத்தான நிலையில், 9 வயது மகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார். என்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி எனது உடமைகளை இளைஞர் ஒருவர் பறித்துக்கொண்டார். இதுகுறித்து பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றேன். அங்கு எஸ்.ஐ.யாக இருந்த சுந்தரலிங்கம் எனது பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறினார்.

எனக்கு உதவுவதுபோன்று இளஞ்சிறை பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தந்தார். பின்னர் விசாரணை செய்ய வந்ததாக வீட்டுக்கு வந்து, என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். இதில் நான் கர்ப்பமடைந்ததை கூறியபோது, கருவை கலைக்குமாறு மிரட்டினார். இதுபற்றி பளுகல், மார்த்தாண்டம் காவல் நிலையங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

இதற்கிடையே தனியார் மருத்துவமனைக்கு என்னை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று கருவை கலைத்தனர். இதனால், எனது உடல்நலம் பாதிக்கப்பட்டது. எஸ்.ஐ., அவருக்கு துணையாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து, மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக எஸ்.ஐ. சுந்தரலிங்கம், அவருக்கு உடந்தையாக இருந்ததாக ஏட்டு கணேஷ்குமார், நண்பர்கள் விஜின், அபிஷேக், உமேஷ், அனில்குமார், மருத்துவர் கார்மல் ராணி, தேவராஜ் ஆகிய 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பதவி உயர்வு

எஸ்.ஐ. சுந்தரலிங்கம் பதவி உயர்வு பெற்று தற்போது தேனி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x