

தமிழகத்தில் சத்துணவுத் துறையில் முதன்முறையாக திருவண்ணா மலை மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கை ஜெயாவுக்கு சத்துணவு அமைப்பாளர் பணி வழங்கப்பட்டுள் ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் கொளத்தூர் ஊராட்சியில் வசித்து வருபவர் திருநங்கை ஜெயா(23). இவருக்கு, கொளத்தூர் ஊராட்சி ஏர்பாக்கம் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணி நியமன ஆணையை ஆட்சியர் அ.ஞானசேகரன் நேற்று மாலை வழங்கினார்.
அப்போது அவர், “திருநங்கை ஜெயாவுக்கு வாழ்த்து தெரிவித்து, மாணவர்களுக்கு தரமான உணவை சமைத்துக் கொடுப்பதோடு அவர் களை நல்வழிப்படுத்த வேண்டும்’’ என்று அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சா.பழனி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) வி.மோகன் ஆகியோர் உடனிருந் தனர்.
ஆட்சியர் அ.ஞானசேகரன் கூறும் போது, “சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட் டன. அதில், ஒரு திருநங்கையிடம் இருந்து மட்டும் விண்ணப்பம் பெற்று பரிசீலித்தோம். அதில் அவர் தகுதி பெற்றுள்ளதால், அவருக்கு சத்துணவு அமைப்பாளர் பணியிடம் ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் சத்துணவுத் துறையில் பணி நியமனம் பெறும் முதல் திருநங்கை ஜெயா. சமுதாயத்தில் உள்ளவர்கள் திருநங்கைகளை புறக்கணிக்கக் கூடாது. அவர் களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். திருநங்கைகளுக்கு வீடு அல்லது மனைப் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
அனைவரும் புறக்கணித்தனர்
திருநங்கை ஜெயா கூறும் போது, “என்னுடைய சொந்த ஊர் சிறுநாத்தூர். என் குடும்பத்தில் 3-வது மகனாக பிறந்தேன். கீழ் பென்னாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 தேர்ச்சி பெற் றேன். 9-ம் வகுப்பு படிக்கும்போது, எனது உடலில் மாற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் சேர்ந்தேன். என்னை புரிந்துகொண்ட மாணவர்கள், நன்றாக பழகினார்கள். ஒருசில மாணவர்கள் மட்டும் என்னை புறக்கணித்தனர். வீட்டிலும் என்னை புறக்கணித்ததால் மன வருத்தம் ஏற்பட்டது.
இதனால் கடந்த 5 ஆண்டு களுக்கு முன்பு வீட்டைவிட்டு வெளியேறினேன். பெங்களூருவில் உள்ள கிருஷ்ணாராஜபுரத்தில் தங்கி இருந்தேன். பின்னர், கொளத்தூரில் குடிசை அமைத்து நான் உட்பட 3 திருநங்கைகள் கடந்த 4 ஆண்டுகளாக தங்கி உள்ளோம். என் தோழி மூலம் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பித்தேன். அதில், தேர்ச்சி பெற்று பணி நியமன ஆணை பெற்றுள்ளேன். திருநங்கைகளில் பலர் படிக்காமல் உள்ளனர். அவர்கள் அனைவரும் பள்ளிக் கல்வி அளவில் தேர்ச்சி பெற்றால் வேலைவாய்ப்பு கிடைக்கும்” என்றார்.