

போக்குவரத்து ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்றும் ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகியும் அதற்கான நடவடிக்கை ஏதும் இல்லை என்றும் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் மாநில சம்மேளன கூட்டம் செங்கல்பட்டில் நேற்று சம்மேளன தலைவரும் சிஐடியு மாநிலத் தலைவருமான அ.சவுந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் கே.ஆறுமுகநயினார், உதவித் தலைவர்கள் எம்.சந்திரன், அன்பழகன், பொருளாளர் சசிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அ.சவுந்தரராஜன் பேசியதாவது:
போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் முடிந்து 2 ஆண்டுகள் ஆகின்றன. தற்போது வந்துள்ள அரசு புதிய ஒப்பந்தம் போடப்படும் என அறிவித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 6 மாதங்கள் ஆன பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை.
தொழிலாளர்களுக்கு பேட்டா ரூ.27 கோடி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதேபோல் ஆயுள் காப்பீடு, வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.10 ஆயிரம் கோடி அரசிடம் உள்ளது. முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. மத்திய அரசு விலையை ரூ.37 உயர்த்திவிட்டு தேர்தல் வருவதால் ரூ.5.மட்டும் குறைத்துள்ளது. ரூ.55-க்கு டீசலும், ரூ.65-க்கு பெட்ரோலும் வழங்க முடியும்.பல்வேறு வெகுஜன அமைப்புகள் இணைந்து உயர்ந்து கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, வரும் டிசம்பர் 10-ம் தேதி போராட்டம் நடத்தத் தயாராகி வருகின்றோம்.
``டிசம்பர் 10-ம் தேதியன்று நண்பகல் 12 மணியிலிருந்து 12:10 வரையில் 10 நிமிடங்களுக்கு இயங்கிக் கொண்டிருக்கும்அனைத்து வாகனங்களையும் நிறுத்துங்கள்'' என பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வாகன ஓட்டிகள் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக வாகனங்களை 10 நிமிடம் நிறுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.