

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பூசிமலைக் குப்பம் கிராமத்தில் 15-ம் நூற் றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால இரண்டு நடுகற்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளதாக சம்புவராயர் ஆய்வு மைய அறக்கட்டளை செயலாளர் முனைவர் அ.அமுல்ராஜ் தெரிவித் துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “பூசிமலைக்குப்பம் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு இருந்த 2 நடுகற்கள் குறித்து வரலாற்று ஆய்வாளர் ஆர்.விஜயனுடன் இணைந்து ஆய்வு செய்யப்பட்டது. அவை இரண்டும் 15-ம் நூற்றாண்டைச் சேரந்த நாயக்கர் கால நடுகற்கள் என்பது தெரியவந்தது. நடுகற்கள் மக்களின் வழிபாட்டில் உள்ளது. வில் அம்பு வீரன் கல் என கூறும் கிராம மக்கள், சிலை முன்பு ஆண் குழந்தைகளை வைத்து, அக்குழந்தைகளும் வீரர்களாக வளர வேண்டும் என வேண்டிக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஒரு நடுகல், வேட்டையில் உயிர்நீத்த வீரனின் நினைவாக வைக்கப்பட்டுள்ளது. 2 அடி அகலம், 3 அடி உயரம் கொண்டது. வீரனின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அவனது தலையின் வலதுபுறம் பெரிய கொண்டை உள்ளது. அணிகலன் அணிந்துள்ளார். அகண்ட கண்கள், முறுக்கிய மீசையுடன் காணப்படுகிறது. இடது கையில் வில்லை தாங்கி உள்ள வீரன், வலது கையில் அம்பை இழுத்து விடும் காட்சி தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது.
மற்றொரு நடுகல், சதிகல் வகையைச் சார்ந்ததாகும். போரில் வீரமரணம் அடைந்த வீரனுடன், அவனது மனைவி உடன்கட்டை என்னும் சதி ஏறியதன் அடையாளமாக வைக் கப்பட்டுள்ளது. 2 1/2 அடி அகலம் மற்றும் உயரம் கொண்டது. நடுகல்லின் வலதுபுறம் ஆண் உருவமும், அவனுக்கு அருகே பெண் உருவமும் காணப்படு கிறது. ஆண் தலையின் வலது புறமும், பெண் தலையின் இடதுபுறம் சாய்ந்த நிலையில் கொண்டை உள்ளது. இருவரும் அணிகலன்கள் அணிந்துள்ளனர்.
ஆண், தனது வலது கையில் கீழ் நோக்கிய போர் வாளைத் தாங்கியுள்ளான். பெண்ணின் வலது கையில் பானை உள்ளது. இருவரின் இடது கைகளிலும் கிளியின் உருவம் காட்டப்பட்டுள்ளது.
போர்க் களத்தில் வீரமரணம் அடைந்ததைக் குறிக்க கீழ்நோக்கிய வாளும், இருவரும் மோட்சம் என்னும் வானுலகை அடைந்தனர் என்பதைக் குறிக்க கிளியின் உருவமும் காட்டப்பட்டுள்ளது” என்றார்.