

பாமக மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோ சனைக் கூட்டம், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. கூட்டத்துக்குப் பிறகு நிருபர்களுக்கு அன்புமணி அளித்த பேட்டி:
தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக இல்லாத ஓர் அரசியல் களம் இப்போது உள்ளது. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் வேண்டாம் என்று நினைக்கும் மக்கள், இக்கட்சிகளுக்கு மாற்று பாமகதான் என்று முடிவு செய்துள்ளனர்.
கடந்த 3 மாதமாக நிலவிவந்த குழப்பமான அரசியல் சூழல் இப்போது தெளிவாகி இருக்கிறது. இத்தேர்தலை நாங்கள் தைரியத்துடன், அதிக தன்னம்பிக்கையுடன் அணுகுகிறோம். அதிமுக மீது மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். 1996-ல் அதிமுக எப்படி படுதோல்வி அடைந்ததோ அத் தகைய தோல்வியை இத்தேர்தலில் சந்திக்கும். திமுக மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். பாமக வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளி யிடப்படும். 110 தொகுதிகளில் எங்கள் கட்சி ஒரு ஏஜென்ஸியுடன் இணைந்து ‘இன்டர்னல் சர்வே’ நடத்தியது. 4 ஆயிரம் இளைஞர்களிடம் கருத்து கேட்டோம். அதில் 82 சதவீத இளைஞர்கள் மாற்றம் வேண்டும் என்று கூறி எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இத்தேர்தலில் 5 முனைப் போட்டி நிலவு வது, எங்களுக்கு மிகவும் சாதகமாக உள்ளது. ஒரு சில வாரங்களில் பாமக தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.
கூட்டணி குறித்து சில மாதங்களுக்கு முன்பு பாஜக பேசியது. அப்போது எங்கள் நிலைப்பாட்டை தெரிவித்தோம். அதன்பிறகு அவர்கள் பேசவில்லை. இவ்வாறு அன்புமணி தெரிவித்தார்.