

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 6 புதிய நீதிபதிகள் நியமிக்கப் படவுள்ளளனர். அவர்களது வாழ்க்கை குறிப்பு:
வி.பாரதிதாசன்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை அடுத்துள்ள ஆலாத் தூரைச் சேர்ந்த வி.பாரதிதாசன் 7-5-1960-ல் பிறந்தவர். இவரது பெற்றோர் எம்.கே.வீராச்சாமி - பொன்னம்மாள். இவர் பி.யு.சி. படிப்பை திருச்சி பிஷப் ஹூபர் கல்லூரியிலும், இளங்கலை பட்டப் படிப்பை சென்னை லயோலா கல்லூரியிலும், சட்டப் படிப்பை சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியிலும் முடித்தார்.
இவரது குடும்பத்தில் இவர்தான் முதல் பட்டதாரி. 1985-ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார். இவர் முன்னாள் அரசு வழக்கறிஞர் தேசபந்து, முன்னாள் நீதிபதி எஸ்.சிவசுப்பிரமணியன், மூத்த வழக்கறிஞர் வி.கே.முத்துசாமி (தற்போது உயர் நீதிமன்ற நீதிபதியான எம்.எம்.சுந்தரேஷின் தந்தை) ஆகியோரிடம் ஜூனியராக பணியாற்றியவர். மத்திய, மாநில அரசு வழக்கறிஞராகவும் பதவி வகித்துள்ளார். இவரது மனைவி மங்கையர்கரசி. மகன்கள் வருண் வீராச்சாமி பொறியியல் கல்லூரியிலும், மற்றொரு மகன் விக்ரம் வீராச்சாமி சென்னை சட்டக் கல்லூரியிலும் படித்து வருகின்றனர்.
எஸ்.எஸ்.சுந்தர்
தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம் புளி கிராமத்தை சேர்ந்த எஸ்.எஸ்.சுந்தர், 3-5-1963-ல் பிறந்தவர். இவரது பெற்றோர் கே.எஸ்.சிவசுப்பிரமணியன் - எஸ்.காசிகனி அம்மாள். பாளையம்கோட்டை புனித சேவியர் கல்லூரியில் பி.எஸ்சி. (வேதியியல்) பட்டம் பெற்றவர். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்து, 1988-ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார். சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.ராஜகோபாலனிடம் ஜூனிய ராக பணியாற்றியவர். உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தற்போது வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார். சென்னை பல்கலைக்கழகம், தேசிய ஜவுளி கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு வழக்கறிஞராக பதவி வகித்துள்ளார். இவருக்கு ஜான்சிராணி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
எம்.வி.முரளிதரன்
வேலூர் மாவட்டம் மணியம்பட்டு கிராமத்தை சேர்ந்த எம்.வி.முரளிதரன் 16.4.1962-ல் பிறந்தவர். இவரது பெற்றோர் கே.வஜ்ரவேலு -தேவகியம்மாள். விவசாயக் குடும்பத்தை சேர்ந்த இவர் பி.ஏ.(தமிழ்) பட்டப் படிப்பை செய்யூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியிலும், எம்.ஏ.(தமிழ்) முதுநிலை பட்டப் படிப்பை சென்னை மாநிலக் கல்லூரியிலும், சட்டப் படிப்பை சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியிலும் முடித் தார்.
1990 முதல் வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார். முன்னாள் நீதிபதி வி.தன பாலனிடம் ஜூனியராக பணியாற்றியுள்ளார். இவரது மனைவி விஜயகுமாரி, சென்னை அய்யப்பன்தாங்கல் அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியை. மகன் எம்.லட்சுமணகுமரன் காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார்.
டி.கிருஷ்ணகுமார்
திருப்பூர் மாவட்டம், தாரா புரத்தைச் சேர்ந்த டி.கிருஷ்ண குமார் 22.5.1963-ல் பிறந்தவர். இவரது தந்தை ஏ.பி.தெய்வ சிகாமணியும் வழக்கறிஞரே. சென்னை மாநிலக் கல்லூரியில் பி.எஸ்சி. பட்டப் படிப்பையும், சென்னை அரசு சட்டக் கல்லூரி யில் சட்டப் படிப்பையும் முடித்தார். 1987-ம் ஆண்டுமுதல் வழக்கறிஞராக தொழில் செய்து வருகிறார். மூத்த வழக்கறிஞர் கே.துரைச்சாமியிடம் ஜூனியராக பணியாற்றியவர். 1991-ம் ஆண்டு முதல் பல்வேறு காலகட்டங்களில் அரசு வழக்கறிஞராக பணியாற்றியவர். 2013-ம் ஆண்டு முதல் கல்வி்த்துறைக்கான சிறப்பு அரசு வழக்கறிஞராக பதவி வகித்து வருகிறார்.
பொன்.கலையரசன்
சேலம் மாவட்டம், மேட்டூர் தாலுகா, குள்ளமுடையனூர் கிராமத்தை சேர்ந்த பொன்.கலையரசன் 1-5-1956ல் பிறந்தவர். இவரது பெற்றோர் கே.எஸ்.பொன்னுச்சாமி, ரத்தினம்மாள். பி.யு.சி. படிப்பை சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும், பட்டப் படிப்புகளை கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா மற்றும் சேலம் அரசு கலைக் கல்லூரியிலும் முடித்தார். ஆந்திர மாநிலம் நெல்லூர் வி.ஆர்.சட்டக் கல்லூரியில் சட்டம் படித்து, 1980-ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக தொழில் செய்து வந்தார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஜி.எம்.நாதன், ஐ.மெகபூப் ஷெரீப் ஆகியோரிடம் ஜூனியராக பணியாற்றியுள்ளார். 1983-ம் ஆண்டு குற்றவியல் நடுவராக நீதித்துறையில் பதவி வகித்த இவர், பின்னர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
தற்போது சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மீனாட்சி. மூத்த மகள் கே.மதுமிதா மருத்துவராகவும், மகன் கார்முகிலன் வெளிநாட்டில் பொறியாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இளைய மகள் சங்கமுகி எம்பிஏ படித்து வருகிறார்.
பி.கோகுல்தாஸ்
காஞ்சிபுரம் மாவட்டம், திருப் போரூர் தாலுகா, கீழுர் கிராமத்தை சேர்ந்த பி.கோகுல்தாஸ், 7-6-1955-ல் பிறந்தவர். இவரது பெற்றோர் கே.வி.பலராமன்- புஷ்பவதியம்மாள். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் பியுசி படிப்பை செங்கல்பட்டு ஸ்ரீ ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசுக்கல்லூரியிலும், பிஏ பட்டப் படிப்பை தாம்பரம் கிறிஸ் துவக் கல்லூரியிலும் முடித்தார். சட்டப் படிப்பை சென்னை அரசு சட்டக் கல்லூரியில் முடித்து, 1979-ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக தொழில் செய்தார். ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி வரதராஜூலு நாயுடுவிடம் ஜூனியராக பணி யாற்றிய இவர், 1984-ம் ஆண்டு குற்றவியல் நடுவராக நீதி்த்துறை பணிக்கு வந்து, மதுரை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிபதியாக பதவி வகித்துள்ளார். இறுதியாக சென்னை மாவட்ட சிறு வழக்கு களுக்கான நீதிமன்ற முதன்மை நீதிபதியாக பதவி வகித்து, கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் 31-ல் ஓய்வு பெற்றார். இவருக்கு ஜி.லட்சுமிபிரபா என்ற மனைவியும், பரணீதர கார்த்திகேயன், ஜி.சங்கர நாராயணன் என்ற மகன்களும் உள்ளனர். இருவருமே பொறியியல் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.