

அடுத்த 10 ஆண்டுகளில் விவசாயம் லாபகரமான தொழிலாக மாறும் என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உலக மண்வள தினம் உள்ளிட்ட முப்பெரும் விழாக்கள் இன்று நடைபெற்றது. இவற்றை தொடங்கி வைத்து தமிழக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்த பேசியதாவது:
”தமிழகத்தில் நெல் உற்பத்தி தேவைக்கு அதிகமாகவே உள்ளது. முன்பெல்லாம் வேப்பம்பிண்ணாக்கு, கடலைபிண்ணாக்கு போன்ற இயற்கை உரங்களால் மண் வளமாக, வாசமாக இருக்கும். இப்பொழுது மண் அந்தளவிற்கு சத்துடன் இல்லை. மண்புழுவைக் கூட உற்பத்தி செய்யக்கூடிய நிலையில் உள்ளோம்.
இயற்கை விவசாயம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற முடியும். அடுத்த பத்து ஆண்டுகளில் விவசாயம் லாபகரமான தொழிலாக மாறும். நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என விவசாயிகள் கூறியுள்ளனர். இந்த கோரிக்கை முதல்வரிடம் எடுத்துச் சொல்லப்படும்.
மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் முருங்கை மூலமாக உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்களையும் ஏற்றுமதி செய்ய உரிய வசதிகள் செய்து தரப்படும். வருங்காலங்களில் தோட்டக்கலைத்துறைக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படும். மதுரை மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு பின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் முருங்கை பயிர் செய்து பயனடைய வேண்டும்”
இவ்வாறு அமைச்சர் பேசினார்.