

தஞ்சாவூரில் விவசாயி பாலன் மீது தாக்கு தல் நடத்திய போலீஸார் மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகம் முழுவதும் போராட் டம் நடத்தப்படும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே யுள்ள சோழகன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி பாலன், தனியார் வங்கியில் (கோடக் மஹிந்திரா) கடன் பெற்று, டிராக்டர் வாங்கியிருந்தார். கடனுக்கான கடைசி 2 தவணைகளை செலுத்தாததால், பாப்பாநாடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் அவரைத் தாக்கி, டிராக்டரை பறிமுதல் செய்ததாகக் கூறப்படும் சம்பவம், தமிழகம் முழு வதும் விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 2-வது நாளாக விவசாயிகள் காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேசிய போலீஸார், அங்கிருந்து கலைந்து செல்லாவிட்டால் கைது செய்வதாகத் தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், தஞ்சை - திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
அப்போது அங்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.என்.மயில்வாகனன், சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதையடுத்து, போராட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்த பி.ஆர்.பாண்டியன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “விவசாயி பாலனைத் தாக்கிய போலீஸார் மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்து, தண்டனை வழங்க வேண்டும். கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால், தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும்'' என்றார்.