Published : 05 Dec 2021 04:06 AM
Last Updated : 05 Dec 2021 04:06 AM

சென்னை புறநகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள போரூர், மாங்காடு, ஐயப்பன்தாங்கலில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு: சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்த உத்தரவு; மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்

சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போரூர், மாங்காடு, ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு, மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். சீரமைப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தமிழகத்தில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் போரூர் ஏரியும் முழுமையாக நிரம்பியது. தொடர்கனமழை காரணமாக ஏரிக்குநீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. உபரிநீர் வெளியேற வழி இல்லாததால் ஏரியை சுற்றி உள்ள மவுலிவாக்கம், ஐயப்பன்தாங்கல், பரணிபுத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

தண்ணீரில் தவிப்பு

குறிப்பாக மவுலிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தனலட்சுமி நகர்,மகாலட்சுமி நகர், பொன்னியம்மன் கோயில் தெரு, ஐயப்பன்தாங்கல் மதுரம் நகர், சீனிவாசாநகர், பரணிபுத்தூர், கொளுத்துவாஞ்சேரி, முத்துநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் கடந்த சில நாட்களாக இடுப்பளவு மழைநீர் தேங்கி இருந்தது. மழை நின்ற பிறகும்கூட, ஐயப்பன்தாங்கல் பகுதியில் மழைநீர் இன்னும் வடியவில்லை.

இதனால், ஏராளமானோர் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு உறவினர்களின் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். மற்றவர்கள் வேறு வழியின்றி, வீட்டைவிட்டு வெளியேறமுடியாமல் தண்ணீருக்கு நடுவே தவித்து வருகின்றனர்.

இதனால் வேதனை அடைந்த அப்பகுதி மக்கள் சில நாட்களுக்கு முன்பு மவுலிவாக்கம் - மாங்காடு சாலையில் மறியல் உட்பட பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அரசு அதிகாரிகளும், போலீஸாரும் அவர்களை சமாதானப்படுத்தி, மழைநீரை அகற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தொடர்ந்து பார்வையிட்டு ஆய்வு செய்து வரும் முதல்வர் ஸ்டாலின், நேற்று காலை தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று, போரூர் ஏரியின் மதகுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து நீர் வெளியேறாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் மாங்காடு சுரங்கப்பாதை பகுதியில், போரூர் ஏரி உபரிநீர் செல்லும் கால்வாயை பார்வையிட்டார்.

பிறகு, ஐயப்பன்தாங்கல், பரணிபுத்தூரில் மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். பின்னர், தனலட்சுமி நகர் பகுதியை பார்வையிட்டார். அப்போது முழங்கால் அளவு தண்ணீரில் நின்றிருந்த பெண்கள் உட்பட பலரும், ‘‘எங்களுக்கு மழைநீரை அகற்றிக் கொடுத்தால் போதும்’’ என்று முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

பலரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அவர்களது குறைகள், கோரிக்கைகளையும் முதல்வர் கேட்டறிந்தார்.

போர்க்கால அடிப்படையில்..

அப்பகுதியில் சீரமைப்பு, நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது அமைச்சர் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்.பி., பேரிடர் மீட்பு கண்காணிப்பு அலுவலரான டாஸ்மாக் மேலாண் இயக்குநர் எல்.சுப்பிரமணியன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் மனோகரன், பொதுப்பணி, வருவாய் துறைகளின் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x