

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வேட்புமனு தாக்கலின்போது, 2-வது நாளாக நேற்றும் அதிமுக அலுவலகத்தில் நடந்த தாக்குதல் சம்பவங்களால் பரபரப்பான நிலை காணப்பட்டது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 3-ம் தேதி தொடங்கியது. ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் நேற்று காலை மனு தாக்கல் செய்தனர். அவர்கள் போட்டியிட வேண்டி 150-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்தனர். ஓபிஎஸ், இபிஎஸ் மனு தாக்கல் செய்து முடித்தபோது, அதிமுக அலுவலக நுழைவுவாயில் அருகே ஒருவரை தொண்டர்கள் சரமாரியாக தாக்கினர். இதையடுத்து, அங்கு இருந்த காவலர்கள் அவரை அருகே உள்ள திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.
அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தியின் ஆதரவாளர் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. வடசென்னை வடக்கு (கிழக்கு)மாவட்டத்தை சேர்ந்த அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர் எஸ்.விஜயகுமார் என்பது பின்னர் தெரியவந்தது. தாக்குதல் குறித்து அவர் கூறியதாவது:
எங்கள் பகுதி மாவட்டச் செயலாளரின் நடவடிக்கைகள் சரியில்லை என்று கட்சி தலைமையிடம் பலமுறை புகார் அளித்தோம். போராட்டமும் நடத்தினோம்.
இந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் பங்கேற்க வந்தேன். நான் ஒருங்கிணைப்பாளருக்கு எதிராக மனு தாக்கல் செய்ய வந்திருப்பதாக மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் தொண்டர்களிடம் கூறி, அவர்களைக் கொண்டுஎன்னை தாக்கச் செய்துள்ளனர். இதுகுறித்து கட்சி தலைமையிடமும், காவல் துறையிலும் புகார் கொடுக்க உள்ளேன்’’ என்றார். பின்னர், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார்.
சிறிது நேரத்தில், சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் அதிமுக அலுவலகத்துக்கு வந்தார். அப்போது மகளிர் அணி தொண்டர் ஒருவர், வெளியே போகுமாறு அவரை பார்த்து கூச்சலிட்டார். இதையடுத்து, அங்கு இருந்தவர்கள் அவரைவெளியே அழைத்துச் சென்றனர். அங்கிருந்த காவலர்கள் அவரை மீட்டுஅழைத்துச் சென்றபோது சிலர்தொடர்ந்து தாக்குதல் நடத்திய நிலையில், அவர் அங்கிருந்து ஓடிவிட்டார்.அவர் பெங்களூரு புகழேந்தியின் ஆதரவாளர் என்பதால் விரட்டியதாக அதிமுக நிர்வாகிகள் கூறினர்.
முன்னதாக, 3-ம் தேதி மனு தாக்கல் செய்ய ஓம்பொடி பிரகாஷ் என்பவர் வந்திருந்தார். முன்மொழிபவர், வழிமொழிபவர் இல்லாமல் மனுவை பெறஅவர் வந்ததால் தகராறு ஏற்பட்டுதொண்டர்களால் தாக்கப்பட்டார். நேற்றும் தாக்குதல் சம்பவங்கள் நடந்ததால் பரபரப்பான நிலை காணப்பட்டது.
அதிமுக தேர்தல் விவகாரம் தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் 5 பேர் புகார் கொடுத்துள்ளனர்.
புகழேந்தி குற்றச்சாட்டு
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி இதுபற்றி கூறியதாவது:
தங்களைத் தாங்களே ஒருங்கிணைப்பாளர்களாக அறிவித்துக்கொள்ள தேர்தல் நடத்துகின்றனர். எதிராக மனு தாக்கல் செய்ய வருவோரை குண்டர்கள் மூலம் தாக்குகின்றனர். இதுதொடர்பாக ஜெயச்சந்திரன், கோபு, புஷ்பராஜ், குமரகுரு,சீனிவாசன் ஆகியோர் அதிமுக அலுவலகத்தில் இருந்து தப்பி வந்து ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார்கொடுத்துள்ளனர். இதுதொடர்பாக காவல் துறையும் நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றம் செல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் வரும் 7-ம் தேதி நடக்க உள்ளது.இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
போலீஸ் பாதுகாப்பு கோரி மனு
இதையடுத்து, அதிமுக தலைமைஅலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்புவழங்கக் கோரி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று மனு கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘‘அதிமுக உட்கட்சித் தேர்தலில் சிலர் குழப்பம் விளைவிக்க முயற்சிக்கின்றனர். கட்சியுடன் தொடர்பு இல்லாதவர்களும், உறுப்பினர்களாக இல்லாதவர்களும் குழப்பம் ஏற்படுத்துகின்றனர். எனவே, அதிமுக அலுவலகத்தில் கலகம் ஏற்படாதவாறு, போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த முயல்வதை அனுமதிக்க முடியாது.எனவே, சட்டம் ஒழுங்கை பாதுகாக்குமாறு காவல் ஆணையரிடம் மனு தந்துள்ளோம். தகுதியுள்ள யாரும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடலாம். யாரும் இதை தடுக்க முடியாது” என்றார்.