

கமல்ஹாசன் எந்த சூழ்நிலையிலும் அரசியலை விட்டுவிலக எண்ணியது இல்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் மவுரியா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாநில மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்துக்கான செயல்பாடுகள், சமூக முன்னேற்றத்துக்கான முன்னுதாரண நடவடிக்கைகள், மக்களின் அத்தியாவசியத் தேவைகளை மக்கள் நீதி மய்யம் மூலமாக பூர்த்தி செய்தல் என மக்கள் நீதி மய்யம் தொடங்கியது முதலே நாள்தோறும் தன் சேவையை செய்வனே செய்துவருகிறது.
கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில் கரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது, `தீவிர அரசியலில் இருந்து கமல் ஓய்வு பெற முடிவு?', `கமல் கட்சிக்கு கிளைமாக்ஸ்..?' போன்ற செய்திகள் பரவின.
கட்சி தொடங்கியபோதே தன் வாழ்நாள் முழுவதும் அரசியலில் சேவையாற்றிடுவேன் என்பதை தெளிவாக குறிப்பிட்டிருந்தார். அவர் வகுத்த அந்த கொள்கையின்படிதான் இப்போதும் செயல்பட்டும் வருகிறார்.
மேலும், தான் உயிரோடு இருக்கும் வரை அரசியலிலும், அரசியல் இருக்கும் வரை மக்கள் நீதி மய்யம் கட்சியும் இருக்கும் என்பதை ஏற்கெனவே கமல்ஹாசன் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். கட்சித் தலைவர் கமல்ஹாசன் எந்த சூழ்நிலையிலும் அரசியலைவிட்டு விலக எண்ணியதே இல்லை.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.