Published : 23 Mar 2016 12:16 PM
Last Updated : 23 Mar 2016 12:16 PM

ம.ந.கூ - விஜயகாந்த் கூட்டணி தமிழக மக்களின் எதிர்பார்ப்புக்கு விரோதமானது: பொன்.ராதாகிருஷ்ணன்

திமுக, அதிமுகவே மீண்டும் ஆட்சி வர வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே இந்த கூட்டணி அமைக்கப்பட்டு இருப்பதாக நான் கருதுகின்றேன் என ம.ந.கூ - விஜயகாந்த் கூட்டணி குறித்து பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "கடந்த 50 ஆண்டுக் காலமாக தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திமுக, அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று மக்கள் விரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்போதாவது ஏதாவது மாற்றம் வந்துவிடாதா என்று உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க கட்சி தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பலம் வாய்ந்த கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருகிறோம்.

இந்நிலையில், வைகோ தலைமையில் அமைந்திருக்கும் மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் அவர்கள் போய் சேர்ந்திருக்கிறார்கள்.

திமுக, அதிமுகவே மீண்டும் ஆட்சி வர வேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே இந்த கூட்டணி அமைக்கப்பட்டு இருப்பதாக நான் கருதுகின்றேன்.

இது தமிழக மக்களின் எதிர்பார்ப்புக்கு விரோதமாக அமைக்கப்பட்டு இருக்கு கூட்டணி. ஆகவே, இந்தக் கூட்டணி மூலமாக தமிழகத்திற்கு எந்தொரு நன்மையும் கிடைக்கப் போவதில்லை. இந்த பெளர்ணமியில் தேய்பிறை நாட்களுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறார்கள்.

பா.ஜ.க கடந்த காலம் போல் அல்லாமல் தற்போது வலுவாக இருக்கின்றோம். அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடப் போகிறோம் என்பதை நாங்கள் முன்பே அறிவித்துவிட்டோம்.

பா.ஜ.க தனிமைப்படுத்தப்பட வில்லை. எங்களுடைய கூட்டணி இல்லாமல் எந்தொரு கட்சியும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது.

கேப்டன் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.வெற்றி பெறாவிட்டாலும், முதலமைச்சர் வாய்ப்பே இல்லாவிட்டாலும் சகோதரர் என்ற முறையில் அவருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x