

காதலிப்பதாக கூறி ரூ.2.30 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தன்னிடம் இருந்து வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக, அழகு நிலையத்தில் பணிபுரியும் நபர் மீது நடிகை ஜூலி புகார் கொடுத்து இருக்கிறார்.
சென்னை பரங்கி மலை பகுதியை சேர்ந்தவர் மரியாஜுலியானா (27). மெரினா போராட்டம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். பின்னர் சில திரைப்படங்களில் நடித்தார். அமைந்தகரை அய்யாவூகாலனி துரைசாமி தெருவில் வசிப்பவர் மனிஷ் (26). இவர் அழகு நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். ஜூலி, மனிஷ் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இந்நிலையில் மனிஷ் மீது சென்னை அமைந்தகரை காவல் நிலையத்தில் ஜூலிஒரு புகார் மனு கொடுத்து இருக்கிறார். அதில், “தனியார்சலூன் கடையில் பணிபுரியும் மனிஷ் என்பவரை காதலித்தேன். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் மனிஷுக்கு 2 பவுனில் தங்கசெயின், பல்சர் இருசக்கர வாகனம், பிரிட்ஜ் உட்பட ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை வாங்கி கொடுத்து இருக்கிறேன். மனிஷ் தற்போது என்னைதிருமணம் செய்ய மறுக்கிறார். மேலும் என்னிடம் இருந்து பணத்தை பறிக்க முயற்சி செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.
புகாரின்பேரில், அமைந்தகரை போலீஸார் விசாரணை நடத்தினர்.அதைத் தொடர்ந்து காவல் நிலையம் வந்த மனிஷ், ஜூலியிடம் இருந்து வாங்கிய பொருட்களை திருப்பிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால், இருதரப்பிலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.