

ஸ்ரீபெரும்புதூர், கிளாய் கிராமத்தில் ஆக்கிரமிப்பு நிலம் என்பதைச்சுட்டிக் காட்டி, அங்கு கட்டப்பட்டிருந்த ஸ்ரீகனக காளீஸ்வரர் கோயிலை வருவாய்த் துறையினர் இடித்துள்ளனர் கோயிலை இடிக்க அழுத்தம் கொடுத்தது யார் என பக்தர்கள், பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே கிளாய் கிராமத்தில், ஸ்ரீபெரும்புதூர் ஏரி கலங்கல் அருகேதிருஞானசம்பந்தர் தபோவனம் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட, ஸ்ரீகனகாம்பிகை உடனுறை ஸ்ரீகனக காளீஸ்வரர் கோயில் உள்ளது. பக்தர்களின் நன்கொடையால் கோயில் விஸ்தரிக்கப்பட்டு 63 நாயன்மார்கள் சந்நிதி, அன்னதானக் கூடம் ஆகியவை கட்டப்பட்டன.
இக்கோயில் ஸ்ரீபெரும்புதூர் பெரியஏரியின் கலங்கல் பகுதியில், ஓடைப்புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்டுள்ளதாகக் கூறி வருவாய்த் துறை சார்பில் கடந்த 27-ம் தேதி, மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையில் கோயில் மற்றும் அதை ஒட்டிய அன்னதானக் கூடத்தை முற்றிலும் இடித்துத் தள்ளினர்.அங்கிருந்த தனியார் உணவகமும் இடிக்கப்பட்டது.
இதுகுறித்து நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் கூறும்போது, “கடந்த 26-ம்தேதி இரவு கோயில் இடம் அரசுக்கு சொந்தமானது. அதனால் ஆக்கிரமிப்பை அகற்ற இருக்கிறோம் எனக் கூறி மின் இணைப்பை துண்டித்து விட்டனர். மறுநாள் காலையில் கோயிலை முற்றிலும் இடித்துவிட்டனர். சிலைகளை அப்புறப்படுத்த அவகாசம் கேட்டும் அவர்கள் உடன்படவில்லை. கோயிலில் இருந்த200-க்கும் மேற்பட்ட சிலைகளை உடைத்து தரைமட்டமாக்கினர். அருகிலுள்ள உணவகம், கோயிலின் நூலகமும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
கோயில் இடிக்கப்படுவது குறித்து ஆட்சியரை சந்தித்து அவகாசம் கேட்கதிட்டமிட்டும் மழையால் எங்களால்ஆட்சியரை சந்திக்க முடியவில்லை.ஆளும்கட்சி சார்ந்த நபரின் அழுத்தம் காரணமாக பட்டா நிலத்தில் கட்டப்பட்ட கோயிலையும் இடித்துள்ளனர்.
பட்டா வழங்கிய நிலத்தைக் கண்டுபிடித்து அளவீடு செய்து வழங்கும்படி மனு செய்துள்ளோம். கோயில் இடிக்கப்பட்டது தொடர்பாக வருவாய்த் துறை மீது போலீஸில் புகார் அளித்துள்ளோம். நீதிமன்றம் மூலம் உரிய தீர்வைப் பெறுவோம்” என்றனர்.
இதுகுறித்து வருவாய்த் துறையினரிடம் கேட்டபோது, “ஓடை புறம்போக்கு நிலத்தில் ஓர் ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்து கோயிலை கட்டியுள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற கோயில் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. நீதிமன்றம் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட்டதன் பேரில், ஓடைப் புறம்போக்கில் கட்டப்பட்ட கோயிலை இடித்தோம். இதில் யாருடைய தலையீடும் இல்லை” என்றனர்.