ராமநாதபுரம் அருகே 10 ஆண்டுகளுக்கு பிறகு கடலில் கலந்த வைகை ஆற்று உபரி நீர்
வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர் ராமநாதபுரம் அருகே முகத்துவாரமான ஆற்றாங்கரையில் வினாடிக்கு 1,500 கன அடி வீதம் கலந்துவருகிறது.
வைகை ஆறும், பாக் ஜலசந்தி கடலும் சங்கமிக்கும் முகத்துவாரமாக ஆற்றாங்கரை கிராமம் அமைந்துள்ளது. பரமக்குடி வரை வைகை ஆறாக வரும் தண்ணீர், அங்கிருந்து பெரிய கண்மாய் மூலமாக தேர்போகி, அத்தியூத்து வழியாக அழகன்குளம்-பனைக்குளம் இடையே நதிப்பாலத்தை கடந்து ஆற்றாங்கரை முகத்துவாரம் வழியாக வங்கக்கடலில் கலக்கிறது.
வைகை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போதெல்லாம் திறந்து விடப்படும் தண்ணீர் ஆற்றாங்கரை கடலில் கலப்பது காலங்காலமாக நடைபெறுகிறது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வைகையாற்று உபரி நீர் கடலில் கலந்து வருகிறது.
ஆற்றாங்கரை முகத்துவாரம் பகுதியில் தடுப்பணை கட்டினால் ஆற்றுப்படுகையை ஒட்டிய தேர்போகி, அத்தியூத்து, கழுகூரணி, குயவன்குடி, வாலாந்தரவை, வழுதூர், பெருங்குளம், பனைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
