

அரசு திட்ட உதவிகளை பெறும் மக்கள் என்றும் நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும், முதல்வருக்கு ஆதரவு தர வேண்டும் என திருமண நிதியுதவி வழங்கும் விழாவில் அமைச்சர் பேசியது விழாவில் நலத்திட்ட உதவிகளை பெற்ற பயனாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மதுரை மாநகராட்சியில் 2,114 ஏழை பெண்களுக்கு ரூ.5.65 கோடியிலான திருமண நிதியுதவியும் தாலிக்கு தங்கமும் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. ஆணையர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா தலைமை வகித்தார். இதில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசியதாவது:
தங்கத்தை வெட்டியெடுக்கும் பெல்ஜியம், ஆப்பிரிக்க நாடுகளில்கூட தங்கம் இலவசமாக வழங்கப்படுவதில்லை. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் முதல்வர் ஜெயலலிதா, பெண்களுக்கு தங்கத்தை இலவசமாக வழங்கி வருகிறார். 1 கோடியே 90 லட்சம் கார்டுகளுக்கு விலையில்லா அரிசி வழங்குவது தமிழ்நாட்டில்தான். அதனால், பசி என்ற வார்த்தையே தமிழ்நாட்டில் இல்லை.
மக்களுக்காகத்தான் திட்டம் திட்டத்துக்காக மக்கள் இல்லை என்ற நிலையை முதல்வர் உருவாக்கியுள்ளார். மக்களிடம் இருந்து பெறப்படும் வரிப்பணத்தை கொண்டு சிறப்பு திட்டங்கள் உருவாக்கி மீண்டும் மக்களுக்கே கொடுக்கிறார். இதுபோன்ற திட்ட உதவிகள் வழங்கும் முதல்வருக்கு நல் லாதரவை தரவேண்டும் என்றார்.
தொடர்ந்து மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா பேசியது: மதுரை மாநகராட்சியில் தற்போது வைகையில் 1, 2-வது குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கு காவிரி மேலூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. அம்ருத் திட்டம் மூலம் ரூ.320 கோடியில் வைகை 3-வது குடிநீர் திட்டம் வழங்கப்பட உள்ளது. இதனால், குடிநீரில் மதுரை தன்னிறைவு பெற்றுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 2-வது பட்டியலில் இந்தியாவிலேயே மதுரை மாநகராட்சி 6-வது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் முதலிடத்தில் உள்ளது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் ஒரு குடும்பத்தில் சுமார் 9 பேர் பயன் பெறுகின்றனர். இப்படி பார்த்தால் இன்று மட்டும் சுமார் 40,000 பேர் பயன்பெறுகிறார்கள். நீங்கள் முதல்வருக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். மின்னஞ்சல் மின் தபால் மூலமும் நன்றியை தெரிவிக்கலாம் என்றார்.
விழாவில் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கை யன், மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், எம்எல்ஏக்கள் முத்துராமலிங்கம், தமிழரசன், கருப்பையா, துணை மேயர் கு.திரவியம் மற்றும் மண்டலத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.