Last Updated : 08 Mar, 2016 07:30 AM

 

Published : 08 Mar 2016 07:30 AM
Last Updated : 08 Mar 2016 07:30 AM

தேமுதிக, பாமகவுடன் இனி பேச வேண்டாம்: அமித்ஷாவிடம் முறையிட தமிழக பாஜக முடிவு

தேமுதிக, பாமகவுடன் இனி வலியச் சென்று கூட்டணிப் பேச்சு நடத்த வேண்டாம் என பாஜக தேசியத் தலைவர் அமித்ஷாவிடம் முறையிடுவது என அக்கட்சியின் தமிழகத் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். மாநிலத் தலைமைக்குத் தெரியாமல் சென்னைக்கு வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குறித்து புகார் தெரிவிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக, பாமகவுடன் கூட்டணி அமைக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக கடந்த ஜனவரியில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருடன் பாஜக தலைவர்கள் பேச்சு நடத்தி வருகின் றனர்.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி சென்னைக்கு வந்த மத்திய அமைச்சரும், தமிழக பாஜக பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர், கூட்டணி குறித்து விஜயகாந்த், அன்புமணி ராமதாஸ் ஆகியோரை சந்தித்துப் பேசினார். ஆனால், இருவரும் எந்த சாதகமான பதிலை யும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த 3-ம் தேதி மீண்டும் சென்னைக்கு வந்தபோதும் விஜயகாந்த், அன்பு மணி ஆகியோர் சந்திக்க மறுத்ததால் பிரகாஷ் ஜவடேகர் ஏமாற்றத்துடன் டெல்லி திரும்பினார்.

யாரையும் சந்திக்காமல் ஜவடேகர் டெல்லிக்கு திரும்பியது கூட்டணி அமைக்கும் முயற்சியில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக விவாதிக்க பாஜக மாநில மையக்குழு கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், எஸ்.மோகன்ராஜூலு, வானதி சீனிவாசன், எச்.ராஜா உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்ற னர். மாநிலத் தலைமைக்கு தெரியாமல் ஜவடேகர் சென்னைக்கு வந்ததும், யாரையும் சந்திக்காமல் தோல்வியுடன் திரும்பியதும் பாஜகவுக்கு அவமானத்தை ஏற்படுத்தி உள்ள தாக அனைவரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கூட்டத்தில் கலந்து கொண்ட மையக் குழு உறுப்பினர் ஒருவர் 'தி இந்து'விடம் பேசும்போது, ‘‘இனி தேமுதிக, பாமகவை தேடிச் சென்று பாஜக தரப்பில் யாரும் பேசக் கூடாது. தேமுதிக, பாமக தரப்பில் விரும்பினால் அவர்கள் டெல்லிக்கு வந்து அமித்ஷாவுடன் பேச வேண்டும் என மையக் குழுவில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. இதனை ஒரு குழுவாகச் சென்று அமித்ஷாவிடம் தெரிவிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்காக அவரிடம் நேரம் கேட்டுள்ளோம்'' என்றார்.

இந்நிலையில் தேமுதிக சார்பில் பிரேமலதா, தேமுதிக இளைஞரணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் அமித்ஷா, பிரகாஷ் ஜவடேகர் ஆகியோரை சந்திக்க டெல்லிக்கு செல்லவிருப்பதாக தகவல் வெளியானது.

இது தொடர்பாக தமிழக பாஜக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘அதற்கான வாய்ப்பு கள் இல்லை. அந்த அளவுக்கு தேமுதிக இறங்கி வரும் என நினைக்கவில்லை'' என்றார்.

தேமுதிக பிரதிநிதிகள் தன்னை சந்திக்க இருப்பதாக வெளியான தகவலை ஜவடேகர் மறுத்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘ஊகங்கள் அடிப்படையிலான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது. யாரும் என்னை சந்திக்கவில்லை. அப்படி எந்தத் திட்டமும் இல்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x